தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பெண் வாக்காளர்களின் மனநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. “மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வாங்குவோம், பொங்கல் பரிசு மூவாயிரம் ரூபாய் வாங்குவோம், அரசு வழங்கும் இலவச பேருந்து சேவையையும் பயன்படுத்துவோம், ஆனால் வாக்கு என்று வரும்போது எங்கள் மனம் கவர்ந்த தளபதிக்கே வாக்களிப்போம்” என்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் முழக்கம் தற்போதைய கள எதார்த்தத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. இது ஒருபுறம் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியையும், மறுபுறம் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் நம்பிக்கையையும் அளித்து வருகிறது.
அரசின் நலத்திட்டங்கள் என்பது மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுபவை என்றும், அது தங்களின் அடிப்படை உரிமை என்றும் பெண்கள் தற்போது ஆழமாக புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர். “காசு கொடுத்தால் தான் ஓட்டு” என்ற நிலை மாறி, “யார் கொடுத்தாலும் வாங்குவோம், ஆனால் எங்களுக்கு பிடித்தவருக்குத்தான் வாக்களிப்போம்” என்ற நிலைக்கு வாக்காளர்கள் உயர்ந்துவிட்டனர். இந்த அரசியல் விழிப்புணர்வு, இலவசங்கள் மற்றும் பணப்பட்டுவாடா மூலம் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்துவிடலாம் என்று நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் ரொக்க பரிசு ஆகியவை பெண்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இருப்பினும், இதே பெண்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற சமூக பிரச்சினைகளை முன்வைத்து விஜய்யின் அரசியல் வருகையை கவனித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் தனது கூட்டங்களில் “பெண்கள் பாதுகாப்பு” மற்றும் “ஊழலற்ற நிர்வாகம்” பற்றி பேசுவது, பாரம்பரிய அரசியலில் சலிப்படைந்துள்ள இளம் பெண்களையும் இல்லத்தரசிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பல பேட்டிகளில், கிராமப்புற பெண்கள் கூட மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். “அரசு கொடுக்கும் பணத்தை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை; அது எங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவை. ஆனால், ஒரு நடிகராக தாண்டி விஜய்யின் கொள்கைகளும், அவர் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையும் எங்களை அவர் பக்கம் ஈர்க்கிறது” என்று அவர்கள் கூறுவது தமிழக அரசியலில் ஒரு ‘சைலண்ட்’ புரட்சி நடைபெறுவதை சுட்டிக்காட்டுகிறது. திராவிட கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியாக கருதும் பெண்களை, ஒரு மாற்று சக்தி எளிதாக தன் பக்கம் இழுத்துவிட முடியுமா என்ற அச்சம் தற்போதைய அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
அதிமுகவும் தன் பங்கிற்குத் தேர்தல் அறிக்கையில் “மகளிர் உரிமைத் தொகையை ரூ.3,000-ஆக உயர்த்துவோம்” என்ற வாக்குறுதியை தயார்ப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படி பணத்தையும் திட்டங்களையும் மையமாக வைத்து போட்டிகள் நடந்தாலும், மக்கள் இப்போது ஒரு தலைவனின் ஆளுமையையும், நேர்மையையும் மட்டுமே வாக்குகளாக மாற்ற துணிகின்றனர். வெறும் சலுகைகளை மட்டும் வழங்கி மக்களின் இதயங்களை வென்றுவிட முடியாது என்பதற்கு, தற்போதைய பெண்கள் காட்டி வரும் இந்த நிலைப்பாடு ஒரு சிறந்த உதாரணமாகும்.
நிச்சயமாக 2026 தேர்தல் என்பது வெறும் பண பலத்திற்கும் அதிகார பலத்திற்கும் இடையிலான போர் மட்டுமல்ல; அது மக்களின் மனமாற்றத்திற்கும் பாரம்பரிய அரசியலுக்கும் இடையிலான ஒரு வாழ்வா சாவா போராட்டமாகும். ஒரு புதிய அரசியல் கட்சிக்கு தமிழக பெண்கள் அளித்து வரும் இந்த மறைமுக ஆதரவு, தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது என்ற ஜனநாயகத்தின் அடிப்படை பண்பு மீண்டும் ஒருமுறை தமிழக மண்ணில் நிரூபிக்கப்பட காத்திருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
