சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிறப்பு வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு ஒரு கிலோ பருப்பு 50 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்பனையானது. அது போல, பாமாயில் ரூ.45-க்கு வெளிச்சந்தையில் விற்பனையாகி வருகிறது.
ஆனால் தற்போது வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்து வந்த நிலையில், இப்போது மானியத்தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்துவிட்டது.
தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.155 முதல் 170 ரூபாய் என்கிற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.95 முதல் 100 ரூபாய் என்கிற அளவில் அதிகரித்து உள்ளது. கொள்முதல் விலை மிக கடுமையாக உயர்ந்த போதிலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று வரை பருப்பு கிலோ ரூ.30-க்கும், பாமாயில் ரூ.25-க்கும் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துவரம் பருப்பு சரியாக விநியோகிக்கப்படவில்லை.. இதேபோல் பாமாயிலும் பலருக்கும் கிடைக்கவில்லை..இந்நிலையில் அரசு பாமாயில், துவரம் பருப்பு கிடைக்கப் பெறாதவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.
இது குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சாா்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் போன்ற சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களை முழுமையாக நகா்வு செய்ய முடியவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரா்களால் ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை முழுமையாகப் பெற இயலவில்லை.
எனவே, குடும்ப அட்டைதாரா்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதத்தில், துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரா்கள், அவற்றை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.