தமிழக அரசியல் களத்தில், வரவிருக்கும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறப் போகும் இலவச வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் அதிகரித்துள்ளன. “எந்த இலவசம் பெருசா இருக்கும்?” என்ற கேள்வி, அரசியல் அரங்குகளுக்கு அப்பால் சாதாரண மக்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் தி.மு.க.வினால் தொடங்கப்பட்ட கலர் டி.வி. திட்டம் ஒரு தொடக்க புள்ளியாக இருந்தது. அதனை தொடர்ந்து மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், ஆடு, மாடு போன்ற இலவசங்கள் அ.தி.மு.க. ஆட்சியிலும் நீடித்தன. தற்போது, மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை தொகையான ரூ.1000 திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து வரை இந்த இலவசங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த இலவச கலாச்சாரம்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்ற ஆழ்ந்த விவாதம் இப்போது பொதுவெளியில் முன்னெடுக்கப்படுகிறது.
இலவசங்கள் என்ற இந்த கலாச்சாரம், வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை அறுவடை செய்வதற்கான மிக எளிய மற்றும் மிகவும் ஆபத்தான கருவியாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், நீண்டகால பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு பதிலாக, உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இலவச பொருட்களை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள ஒரு தரப்பு மக்களுக்கு இந்த இலவசங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது உண்மைதான் என்றாலும், இது ஒட்டுமொத்த மாநிலத்தின் நிதி நிலைமைக்கு பெரும் சுமையாக மாறுவதுடன், மக்களின் உற்பத்தி திறனையும் உழைக்கும் ஆர்வத்தையும் குறைத்து, அவர்களை இலவசங்களை மட்டுமே எதிர்பார்த்திருக்கும் ஒரு நிலைக்கு தள்ளுகிறதா என்ற விவாதம் தவிர்க்க முடியாதது.
தமிழகத்தை பொருத்தவரை இலவச லேப்டாப் திட்டம், இலவச சைக்கிள் திட்டம் மட்டுமே ஓரளவுக்கு ‘உருப்படியான திட்டம்’ என்று சமூக ஆர்வலர்கள் அங்கீகரிக்கின்றனர். ஏனெனில், இலவச லேப்டாப்கள் மாணவர்களின் கல்வி, தகவல் தொழில்நுட்ப அறிவு, மற்றும் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்த உதவியது. இலவச சைக்கிள் மாணவர்கள் போக்குவரத்துக்கு உதவியது. இது ஒரு முதலீடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், மிக்சி மற்றும் கிரைண்டர் போன்ற இலவசப் பொருட்கள், உடனடியாக நுகரப்படும் தன்மை கொண்டவையாகவும், பொருளாதார உற்பத்திக்கு நேரடியாக உதவாதவையாகவும் உள்ளன. மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உரிமை தொகை கூட, பெண்களின் பொருளாதார அதிகாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், இதன் மீதான அரசின் செலவினம் மற்றும் நிதி பயன்பாடு குறித்த வெளிப்படையான விவாதம் தேவைப்படுகிறது.
இந்த இலவப் போட்டியில், அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஒரு கட்சி ஒரு இலவசத்தை அறிவித்தால், அடுத்த கட்சி அதைவிட ‘பெரிய’ அல்லது ‘புதிய’ ஒரு கவர்ச்சிகரமான இலவசத்தை அறிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. உதாரணமாக, மின்சார கட்டண சலுகை, போக்குவரத்து சலுகைகள், அல்லது மருத்துவ வசதிகள் குறித்த காப்பீட்டு திட்டங்கள் என பல சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், இந்த வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம், இந்த திட்டங்களால் ஏற்படும் நீண்டகால பொருளாதார தாக்கம், மற்றும் மாநிலத்தின் கடன் சுமை குறித்த தெளிவான விளக்கங்கள் பெரும்பாலும் அளிக்கப்படுவதில்லை. இந்த வாக்குறுதிகள் மக்களை இலவசங்களின் பின்னால் ஓட வைக்கும் அரசியல் தந்திரங்களாகவே மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் பலரும் வெளிப்படுத்தும் ஆதங்கமான இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது என்ற கருத்து, ஒரு கசப்பான உண்மையை பிரதிபலிக்கிறது. இது மக்களை இலவசங்களை தேடும் ஒரு கூட்டமாக மாற்றுவதோடு, ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் தலைவர்களிடம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற நீண்ட கால பலன்களை தரக்கூடிய திட்டங்களை கேட்க வேண்டும் என்ற சிந்தனையை குழிதோண்டி புதைக்கிறது. இலவசங்கள் குறுகிய கால ஆறுதல் அளிக்கும். ஆனால், நிலையான பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமே தமிழ்நாட்டை உண்மையிலேயே ‘உருப்பட’ வைக்கும்.
எனவே, வரவிருக்கும் தேர்தல் அறிக்கைகள் வெறும் கவர்ச்சிகரமான இலவச பொருட்களின் பட்டியலாக இல்லாமல், தொலைநோக்கு பார்வை கொண்ட, பொறுப்புடன் நிதி பயன்பாட்டை கொண்ட, மற்றும் மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் உறுதியான திட்டங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். இலவசங்களை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், அவை பொருளாதார உற்பத்திக்கு உதவும் அல்லது மனித வள மேம்பாட்டிற்கு உதவும் முதலீடுகளாக இருக்க வேண்டும். இலவசங்களின் அளவை உயர்த்துவதை விடுத்து, மக்கள் இலவசங்களை நாட வேண்டிய தேவையை அடியோடு குறைக்கும் திட்டங்களை அளிப்பது மட்டுமே, தமிழக அரசியல் கலாச்சாரத்தை ஒரு ஆரோக்கியமான திசையில் மாற்றியமைக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
