2026ல் யார் ஜெயித்தாலும் மக்களுக்கு தோல்வி தான்.. தலைக்கு மேல் கடன்.. ரூ.1000 மகளிர் உரிமை திட்டம் தொடராது.. வரிச்சுமை உச்சம் செல்லும்..!

  2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் ஜெயித்தாலும் மக்களுக்கு தோல்விதான் என்றும், புதிய அரசால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத அளவுக்கு நிதிச்சிக்கல் இருப்பதாகவும், கடன் சுமை தலைக்கு மேல் போய்விட்டதாகவும்…

money

 

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் ஜெயித்தாலும் மக்களுக்கு தோல்விதான் என்றும், புதிய அரசால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத அளவுக்கு நிதிச்சிக்கல் இருப்பதாகவும், கடன் சுமை தலைக்கு மேல் போய்விட்டதாகவும் அரசியல் வியூக நிபுணர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழ்நாட்டை கடன் நாடாக மாற்றி விட்டது என்றும், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகையான ஆயிரம் ரூபாய் என்பது தேவையில்லாத ஒன்று என்றும் கூறப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு கோடி பெண்களுக்குக் கொடுப்பதாக வைத்து கொண்டாலும், ஒவ்வொரு மாதமும் ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்றும், இந்த ஆயிரம் கோடி ரூபாயை வைத்து எத்தனையோ திட்டங்களுக்கு செலவு செய்தால் பல பிரச்சனைகள் நீங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பணத்தை கொடுக்கலாம் என்றும், ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யலாம், கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும், இது போன்று எத்தனையோ தமிழக அரசின் ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணமெல்லாம் மகளிர் உரிமை திட்டத்திற்காக செல்கிறது என்றும், மாதம் ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டு பணம் வீணாகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

அந்த ஆயிரம் ரூபாயை வைத்து ஒவ்வொரு பெண்ணும் பெரிய அளவில் எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆனால், அந்த ஆயிரம் கோடி ரூபாயை வைத்து தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம். இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வேறு சில நலத்திட்டங்களை நிறுத்திவிட்டு பணம் கொடுக்க வேண்டிய நிலைதான் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே, 1000 ரூபாய் திட்டத்தை புதிய அரசு (2026-க்குப் பிறகு வரும்) நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்றும், இந்த திட்டத்தை தொடர வாய்ப்புகள் குறையும் என்றும் அரசியல் வியூக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கான நலத்திட்டம், ஆசிரியர்களுக்கான நலத்திட்டம், பொதுமக்களுக்கான நலத்திட்டம், வீட்டு வரி, சொத்துவரி குறைப்பு உள்ளிட்ட பல மக்களுக்கு பயன்படும் திட்டங்களை இந்த ஆயிரம் கோடி ரூபாயை வைத்து செய்யலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு கல்வியை இலவசமாக கொடுக்கலாம், மருத்துவத்தை இலவசமாக கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு ஆயிரம் ரூபாய் இலவசமாக கொடுப்பது என்பது ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும், உலகிலேயே இது போன்ற செயல் யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே, இன்னும் எத்தனை மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால், புதிய அரசு பதவியேற்ற பின் ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதை எப்படி சமாளித்து கொடுத்தார்களோ, அதே போல் இனிவரும் ஆண்டுகளிலும் சமாளித்து கொடுக்க முயற்சிகள் நடத்தப்படும் என்றும், இந்த திட்டம் நிறுத்த வாய்ப்பு இல்லை என்றும் இன்னொரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.