தமிழக அரசியலில் “தனி மரம் தோப்பாகாது” என்ற பழமொழி தேர்தல் களத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், வலுவான கூட்டணிகள் இன்றி எந்தவொரு கட்சியும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது அரிதான நிகழ்வே. தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடியே, கடந்த தேர்தல்களில் சுமார் 32 கட்சிகளின் ஆதரவுடன்தான் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்தி பிரதமர் பதவியை தக்கவைத்து கொண்டார். மாநில அளவில் வலுவாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட, 10-க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிய பிறகே ஆட்சியை பிடிக்க முடிந்தது. இந்த யதார்த்தம், தமிழக அரசியலில் தனித்து நிற்பது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பதை உணர்த்துகிறது.
கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல ஆண்டுகளுக்கும் மேலாக “தனித்து போட்டி” என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்தும் இன்னும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத சூழலே நிலவுகிறது. ஏன் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அவரது வாக்கு வங்கி படிப்படியாக உயர்ந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவையான பெரும்பான்மையை எட்ட ஒரு வலுவான கூட்டணி அவசியம் என்பதை அவரது தேர்தல் முடிவுகள் பாடமாக சொல்லுகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவர் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ள நிலையில், அது அவருக்கு மீண்டும் ஒரு சவாலான பயணமாகவே அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த சூழலில்தான், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ தனது முதல் தேர்தல் களத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. விஜய் தனது ஆரம்பகால பேச்சுகளில் “அதிகாரத்தில் பங்கு” மற்றும் “கூட்டணி ஆட்சி” போன்ற கருத்துகளை தூவியிருந்தாலும், தற்போது அவர் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் விஜய் மீது வைத்துள்ள அபாரமான நம்பிக்கை அவருக்கு ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இந்த கூட்டமே அவருக்கு ஒரு ‘தோப்பாக’ மாறும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், தேர்தல் கணக்குகள் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவை என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
விஜய்யின் பலமாக பார்க்கப்படுவது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய முகத்தை தேடும் இளைஞர் பட்டாளம் தான். “எல்லோரும் கூட்டணி வைத்து போட்டியிடும்போது, நாங்கள் ஏன் தனித்து நின்று எங்கள் பலத்தை நிரூபிக்க கூடாது?” என்ற எண்ணம் விஜய்யின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், வாக்குகள் சிதறும்போது அது ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடியும் என்ற அரசியல் சூட்சுமத்தையும் விஜய் புறந்தள்ளிவிட கூடாது. அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் விஜய்யின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வரும் நிலையில், அவர் எடுக்கப்போகும் முடிவு தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
யதார்த்த அரசியலில் தொகுதி வாரியான வாக்கு பலம், பூத் கமிட்டிகளின் வலிமை மற்றும் ஜாதி ரீதியான வாக்கு வங்கிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு புதிய கட்சிக்கு மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சமமான பலத்துடன் பூத் கமிட்டிகளை அமைப்பது என்பது இமயமலை போன்ற சவாலாகும். இதனை சமாளிக்க அனுபவம் வாய்ந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பதே புத்திசாலித்தனம் என்று ஒரு தரப்பு கூறினாலும், விஜய்யோ தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திய அதிரடி மாற்றத்தை போல, தமிழகத்திலும் இளைஞர்களின் சக்தியால் ஒரு புரட்சியை செய்ய முடியும் என்ற முனைப்பில் அவர் இருக்கிறார்.
இறுதியாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது விஜய்க்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாகும். சீமானின் அனுபவ பாடங்களையும், மோடி மற்றும் ஸ்டாலின் பின்பற்றும் கூட்டணி வியூகங்களையும் விஜய் ஒருமுறை சீர்தூக்கி பார்க்க வேண்டிய தருணம் இது. இளைஞர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை அவருக்கு வெற்றிவாகையை சூடுமா அல்லது கூட்டணி இன்றி தனித்து நிற்பது அவரது அரசியல் வாழ்வின் முதல் சறுக்கலாக அமையுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். எது எப்படியிருப்பினும், தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி; அந்த மாற்றத்தை விஜய் எப்படி சாத்தியமாக்க போகிறார் என்பதே தற்போதைய கேள்வி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
