நடிகர் விஜய்யின் அரசியல் பாணி என்பது உண்மையில் இந்திய அரசியலின் வழக்கமான வரைமுறைகளை உடைப்பதாகவே உள்ளது. ஒரு கட்சி தலைவர் என்றால் தினமும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும், ஒவ்வொரு அரசு அறிவிப்புக்கும் அறிக்கை விட வேண்டும், போராட்ட களத்தில் நிற்க வேண்டும் என்ற பொதுவான விதியை அவர் மாற்றியமைத்துள்ளார். இது ஒரு ‘மௌனப் புரட்சி’ போல தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலில், குறிப்பாக தமிழகத்தில் ஒரு தலைவர் தனது இருப்பை தக்கவைத்து கொள்ள தினமும் ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முற்றிலும் மாறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராடவில்லை, ஒவ்வொரு சிறிய விவகாரத்திற்கும் அறிக்கை போர் தொடுக்கவில்லை. ஆனாலும், அவர் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறையாமல் இருப்பது அரசியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் இந்த ‘ரிஸ்க் இல்லாத, ஆனால் அதிக பலன் தரும்’ உத்தி அவரது சினிமா பயணத்தை போலவே அரசியலிலும் பிரதிபலிக்கிறது. தன் மீதான கடுமையான விமர்சனங்களுக்கு கூட அவர் மேடை போட்டு பதிலளிப்பதில்லை. இந்த மௌனம் அவரது எதிரிகளுக்கு பலவீனமாக தெரிந்தாலும், பொதுமக்களுக்கு அது ஒரு விதமான முதிர்ச்சியான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. மற்ற தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபடும்போது, விஜய் அமைதியாக தனது உட்கட்டமைப்பு வேலைகளில் கவனம் செலுத்துவது தனித்துவமானது.
இதற்கு முன் எம்.ஜி.ஆர் தனது படங்களில் எத்தகைய பிம்பத்தை உருவாக்கினாரோ, அதே பாணியை தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப விஜய் கையாள்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு, அவர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு மர்மம் கலந்த எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. சமூக வலைதளங்களில் அவர் குறித்து வெளியாகும் ஒரு சிறு செய்தி கூட ‘வைரல் ஆவதற்கு அவர் கடைப்பிடிக்கும் இந்த தூரமே காரணமாகும். “அதிகமாகப் பேசாத ஒருவரால் அதிரடியான மாற்றத்தை கொடுக்க முடியும்” என்ற நம்பிக்கை ஒரு தரப்பு மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.
சமீபகாலமாக, மதுரையில் நடந்த தவெக மாநாடு மற்றும் கட்சி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கூடிய மக்கள் கூட்டமே இதற்கு சாட்சி. திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு ‘புதிய முகம்’ வேண்டும் என்று நினைக்கும் நடுநிலை வாக்காளர்களுக்கு, விஜய்யின் இந்த அமைதியான அணுகுமுறை ஒரு நேர்மறையான மாற்றமாக தெரிகிறது. அவர் இதுவரை மத்திய அரசை நேரடியாகவோ அல்லது மிக கடுமையாகவோ விமர்சிக்கவில்லை என்றாலும், தனது கொள்கைகளில் “சமூக நீதி மற்றும் மாநில தன்னாட்சி” என்பதை தெளிவாக வைத்துள்ளார்.
வழக்கமான அரசியல்வாதிகள் போல வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், “செயலில் காட்டுவோம்” என்ற தொனியில் அவர் நகர்ந்து வருவது புதுமையானது. இது உண்மையில் இந்திய அரசியலில் இதுவரை பார்த்திராத ஒரு ‘சைலண்ட் மூவ்’. ஒருவேளை, மக்கள் பாரம்பரிய அரசியல் சத்தங்களால் அலுத்துப்போய் இருப்பதால், விஜய்யின் இந்த மௌனத்தை ஒரு மாற்றத்திற்கான அடையாளமாக கருதுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
எது எப்படியோ, 2026 தேர்தல் களம் என்பது வெறும் இரண்டு துருவ போட்டி கிடையாது என்பதை விஜய் தனது ‘அமைதியான அரசியல்’ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல், வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தும் அவரது இந்த ஸ்டைல் வெற்றியை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும். ஆனால், அதற்கு முன்னரே அவர் மக்களின் மனதை ஒரு விதத்தில் வென்றுள்ளார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

