அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, காலை 9:15 மணிக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், அது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 1972ஆம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கும் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி என அனைத்து தலைவர்களுக்கும் விசுவாசமாக இருந்துள்ளார்.
அவருடைய ரத்தத்திலேயே அதிமுக உள்ளதால் அவர் வேறு எந்தக் கட்சிக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கு செல்ல வாய்ப்பில்லை. அவரது அறிவிப்பின் முக்கிய நோக்கம், அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதாகவே இருக்கும் என்றும், அதற்காக சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போன்ற தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தால், அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என்றும், இதனால் தி.மு.க. எளிதில் வெற்றி பெறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒன்றிணைக்க விரும்பவில்லை. ஏனெனில் அவருக்கு அதிமுக ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற சுயநலம் உள்ளது. ஒரே ஒரு நபரின் பதவி ஆசைக்காக கட்சி அழிவதை எந்தவொரு அதிமுக தொண்டரும் ஏற்று கொள்ள மாட்டார். இந்தச் சூழ்நிலையில், செங்கோட்டையனின் இந்த நடவடிக்கை ஈ.பி.எஸ்ஸுக்கு ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், செங்கோட்டையனுக்கு ஆதரவு குவியவும் வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க.வின் தொண்டர்கள் அனைவரும் கட்சி ஒன்றுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, தொண்டர்களின் இந்த கருத்தை எதிரொலிப்பதாக இருக்கும்.
அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்த வேண்டும் அல்லது எடப்பாடி பழனிசாமியை வெளியேற்றிவிட்டு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை தனது தலைமையில் உருவாக்க வேண்டும் என்பதுதான் செங்கோட்டையன் முடிவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்றி, ஈ.பி.எஸ்ஸை வெளியேற்றவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் புதிய அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடர் நகர்வுகள், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
