தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் கருத்துகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. பா.ஜ.க.வுக்கு அண்ணாமலையின் வேகம் ஒத்துப்போகவில்லை என்று குருமூர்த்தி கூறியிருந்தார். இது குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகள் முரண்பாட்டுடன் உள்ளது.
குருமூர்த்தி முன்னர் அண்ணாமலைக்கு டெல்லியில் பெரிய பதவி கிடைக்கும் என்று பேசிய நிலையில், தற்போது அவரது வேகம் பா.ஜ.க.வுக்கு பொருந்தவில்லை என்று கூறுகிறார். இது டெல்லியின் அரசியல் நிலையைப் பொறுத்து அவரது கருத்து மாறுவதாக தோன்றுகிறது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க. வலிமை பெற, ‘பைபோலர்’ (இருமுனை) அரசியல் நிலையை உடைத்து, ‘மல்டிபோலர்’ (பன்முனை) அரசியல் நிலையை உருவாக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
பைபோலர் அரசியல் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே களத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலை பல வருடங்களாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க. கூட்டணி வைத்தாலும், காங்கிரஸ் கூட்டணியின் பலத்தால் தி.மு.க. 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் மல்டிபோலர் அரசியலில் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வைத் தவிர, பிற கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறும் நிலையை கொண்டு வர வேண்டும் என்பது அண்ணாமலையின் கருத்து. இது 1998-ல் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதை போல, தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வழிவகுக்கும் என்று ஐடியா கொடுத்தார். ஆனால் பாஜக மேலிடம் அவரது கருத்தை ஏற்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வலதுகரமாக இருந்த சசிகலாவை பா.ஜ.க. கூட்டணியில் சேர்த்தால், அவர் ஒரு சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்து, தமிழக அரசியலை பன்முனை போட்டியாக மாற்ற முடியும் என்று சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை முன்னிறுத்துவதன் மூலமும் தமிழக அரசியலை பன்முனை போட்டியாக மாற்றலாம் என்றும், இது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என்றும் சிலர் நம்புகின்றனர்.
இந்த யுக்தி குறித்து பேசுகையில், பா.ஜ.க.வின் தலைமை குழுவிடம் அண்ணாமலை, சீமானை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று முன்மொழியலாம். இதன்மூலம் சீமான் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை பிரித்து, பா.ஜ.க.வின் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பை உருவாக்கும். இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைந்தால் வலுவான கூட்டணியாக அமையும் என்பது அண்ணாமலையின் எண்ணமாக இருந்தது.
அண்ணாமலையின் இந்த அணுகுமுறை குருமூர்த்தி போன்ற சில மூத்த தலைவர்களின் கருத்துக்கு முரணாக இருந்தாலும், இதுவே பா.ஜ.க.வுக்கு நன்மை பயக்கும் என சிலர் வாதிடுகின்றனர். பிரதமரின் ஆதரவு இருந்தால், அண்ணாமலையின் ஐடியா இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நல்ல ரிசல்ட்டை தரும்.
அரசியலை லண்டன் வரை சென்று படித்த அண்ணாமலையின் இந்த ஐடியா, அரசியல் ரீதியாக இது ஒரு சவாலான முயற்சியாக தோன்றினாலும், அண்ணாமலை சீமானை வெற்றிகரமாக கூட்டணிக்கு கொண்டு வந்தால், அது அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும். இது பா.ஜ.க.வின் தமிழக அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு புதிய திசையை வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜக தலைமையோ, கடைசி வரை அதிமுக குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அண்ணாமலையின் ஐடியாவை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
அண்ணாமலையின் இந்த வியூகம் வெற்றியடைந்தால், பாஜக தமிழகத்தில் நேரடியாக ஆட்சி அமைக்காவிட்டாலும், ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும். திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகள் பிரிவதால், இது தேசிய அளவில் பாஜகவுக்கு பெரிய லாபத்தை கொடுக்கும்.
ஒருவேளை இந்த முயற்சி தோல்வியடைந்தால், தமிழகத்தில் பாஜக மேலும் தனிமைப்படுத்தப்படலாம். சீமான், இந்த கூட்டணியில் சேர்ந்தால் நாம் தமிழர் கட்சியின் தனித்துவமான கொள்கை பாதிக்கப்படலாம். இது தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுக்கும் சாதகமாக அமையலாம்.
மொத்தத்தில் அண்ணாமலையின் ஐடியா, விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் வொர்க்-அவுட் ஆக வாய்ப்பு உள்ளது என்றும், விஜய் வருகையால் அண்ணாமலையின் இந்த ஐடியா தமிழகத்தில் செல்லுபடியாகாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
