மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளைத் தடுப்பதற்காக, வீடுகளில் RCD (Residual Current Device) என்ற பாதுகாப்பு சாதனத்தை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மழைக்கால பாதுகாப்பு என்ற ஹேஷ்டேக்குடன் இந்த விழிப்புணர்வை நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.
RCD என்பது, மின் கசிவு ஏற்படும்போது தானாகவே மின்சாரத்தை துண்டிக்கும் ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். வீடுகளின் மின் பெட்டிகளில் இதை நிறுவுவதன் மூலம், மின்சார விபத்துகளில் இருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மழைக்காலத்தில், மின் கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு சிறிய மின் கசிவு ஏற்பட்டாலும், RCD அதை உடனடியாக உணர்ந்து, சில நொடிகளில் மின்சார விநியோகத்தை துண்டித்துவிடும். இதன் மூலம், மின்சார அதிர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
TANGEDCO தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள விளம்பர படத்தில், ஒரு மின்சார ஊழியர் வீட்டு உரிமையாளருக்கு மின் பெட்டியில் RCD-ஐ நிறுவுவதை காணலாம். “ஒரு சிறிய மின் கசிவை கூட உணர்ந்தால், RCD சில நொடிகளில் மின்சாரத்தை துண்டித்துவிடும்” என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. இது, பாதுகாப்பான வாழ்க்கைக்கு RCD எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.
மழைக்காலத்தில் வீடுகளையும், குடும்ப உறுப்பினர்களையும் மின்சார அபாயங்களில் இருந்து பாதுகாக்க, இந்த RCD சாதனத்தை நிறுவுவது மிகவும் முக்கியமானது.

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
