விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று சொல்வதற்கு நீங்களும் நானும் யார்? மக்கள் முடிவு பண்ணட்டும்.. விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிட முடியாது என்றாலும் எம்ஜிஆருக்கு வந்த கூட்டம் விஜய்க்கு வருகிறது.. வரும் தேர்தல் விஜய் vs உதயநிதி தான்.. ராதாரவி பேட்டி..!

தமிழ்நாட்டில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தை பற்றியும், நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான பார்வை, மற்றும் இளைய தலைமுறை அரசியல் தலைவர்கள் குறித்த பல்வேறு கருத்துகளை நடிகர் ராதாரவி…

vijay mgr

தமிழ்நாட்டில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தை பற்றியும், நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான பார்வை, மற்றும் இளைய தலைமுறை அரசியல் தலைவர்கள் குறித்த பல்வேறு கருத்துகளை நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் பேசுவதை போல, அவரின் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தால், தேர்தலில் அவர் ஒருவேளை வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றே நான் கருதுகிறேன்’ என்று கூறிய ராதாரவி, ‘எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது மக்கள் மத்தியில் அவர்மீது இருந்த நம்பிக்கை வேறு மாதிரியாக இருந்தது. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த உடனேயே நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி, ‘வெற்றி பெற்றால் நான் மன்னன், தோல்வி பெற்றால் நாடு’ என்று பேசி பெரிய வெற்றி பெற்றார். இது அவருக்கு ஒரு போனஸ் போல அமைந்தது.

அதேபோல் விஜய்யின் கூட்டத்தை பார்த்து அவர்மீது மக்கள் நம்பிக்கை வைக்கிறார்களா? இல்லையா? என்பது தேர்தல் வந்தால் மட்டுமே தெரியும். இவ்வளவு பெரிய கூட்டம் திரள்வது எதிர்பாராதது. விக்கிரவாண்டி மற்றும் கரூர் கூட்டங்களில் திரண்ட மக்கள் கூட்டம் மிகவும் பிரம்மாண்டமானது. விஜய்யை பார்க்க வந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா? மாறாதா? என்பதை நீங்களும் நானும் சொல்ல முடியாது. ஓட்டு போடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. ஓட்டாக மாறாது என்று சொல்வதற்கு யாரும் உரிமை இல்லை. தேர்தல் முடிவு தான் இதற்கு பதில்’ என்றும் ராதாரவி தெரிவித்தார்.

கரூர் கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் வேறு எங்கும் நடக்கவில்லை; அங்கு மட்டும் ஏன் நடந்தது என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை அல்லது உரிய விசாரணை மூலம் உண்மை வெளியே வர வேண்டும்.

நடிகர் விஜய் ஆரம்பத்தில் அதிகம் பேசாத, அமைதியான நபராகத்தான் இருந்தார். ‘சர்க்கார்’ படப்பிடிப்பின்போது கூட, ஒரு சாதாரணமானவராகவே காணப்பட்டார். தான் நடித்த ‘நாளைய தீர்ப்பு’ முதல் படம் தொடங்கி பல படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும், அவர் மிகவும் அமைதியானவர் என்றும், சமீபத்தில் விக்கிரவாண்டி மற்றும் கரூர் கூட்டங்களில்தான் அவரை போல்டாக பேச பார்த்தேன். ஒரு பெரிய அரசியல் சிக்கலை சமாளிக்கும் பக்குவம் விஜய்க்கு இன்னும் வர வேண்டும் என்றும் அல்லது அவர் அதற்கு தயாராகி வருகிறார் என்றும் நினைக்கின்றேன்’ என்றும் ராதாரவி தெரிவித்தார்.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்பது தி.மு.க vs த.வெ.க என்று இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராதாரவி, விஜய் ஏற்கெனவே தனது போட்டி தி.மு.க-வுடன் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. இரவோடு இரவாக வந்த கட்சி அல்ல; அது 1947-இல் இருந்து பெரும் போராட்டங்களுக்குப் பின் 1967-இல்தான் ஆட்சிக்கு வந்தது. அந்த கட்சியை எதிர்க்கும் வலிமை விஜய்க்கு இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு அரசியல் பின்புலத்திலிருந்து வந்தவர். அவர் சினிமாவில் நடித்தாலும், அவர் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தற்போது துணை முதலமைச்சர் போன்ற பதவிகளில் வைக்கப்படுவது, அவர் அரசியலின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. தற்போது உதயநிதியின் பேச்சுக்களும் முன்பைவிட முதிர்ச்சியுடன் இருக்கிறது. வரும் தேர்தலே விஜய் vs உதயநிதி என்று கூட வரலாம்.

விஜய்யை எம்.ஜி.ஆர். அல்லது விஜயகாந்துடன் ஒப்பிடுவது குறித்து பேசிய ராதாரவி, ‘விஜய்யை எம்.ஜி.ஆர்-ஐ ஒப்பிடுவதே தவறு, அவருடைய அணுகுமுறை வேறுபட்டது. அதேபோல், விஜயகாந்தின் திறமைகளும், பேச்சுக்களும் வேறு. அவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். விஜயகாந்த் போன்ற வேறுபட்ட ஆளுமையுடன் விஜயை ஒப்பிடுவது சரியல்ல என்றும், விஜய் வேறுபட்ட ஆளுமை கொண்டவர். இருப்பினும், விஜய்க்கு வரும் கூட்டம் எம்.ஜி.ஆருக்கு வந்த கூட்டத்திற்கு சமமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்’ என்று ராதாரவி தெரிவித்தார்.