தமிழக அரசியல் மற்றும் சினிமா தளத்தில் தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள்தான். இதில் ‘பராசக்தி’ திரைப்படம் மொழிப்போர் பின்னணியை கொண்டிருப்பதோடு, அதன் டீசரில் ஒலிக்கும் அண்ணாவின் குரல் போன்ற வசனங்கள் திமுக – காங்கிரஸ் உறவில் இருக்கும் விரிசலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, “யார் செய்தாலும் அவர்கள் என் தம்பிகள்தான்” என்ற அண்ணாவின் வரலாற்று புகழ்மிக்க வரிகள், இன்றைய அரசியலில் மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு திமுக அளிக்கும் பதிலடியாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களை இந்த படம் நினைவூட்டுவது, தற்போதைய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியாக பார்த்தால், காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான பிளவு என்பது வெறும் யூகமல்ல, அது உண்மையாகி வருவதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. ராகுல் காந்தியின் பயணத்திற்கு தமிழக காங்கிரஸ் துரோகம் செய்வதாக ஜோதிமணி போன்றவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார பகிர்வு குறித்த மாணிக்கம் தாகூரின் கருத்துக்கள் கூட்டணியின் பலவீனத்தை பிரதிபலிக்கின்றன.
பராசக்தி திரைப்படம் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும், அப்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்களையும் மையமாக வைத்து திரையிடப்பட்டுள்ளது. இன்றைய ‘ஜென் சி’ தலைமுறைக்குக் காங்கிரஸ் என்பது திமுகவின் நீண்ட கால தோழமைக்கட்சி என்ற பிம்பமே உள்ளது. ஆனால், இந்தப் படம் காங்கிரஸை ஒரு ‘ஒடுக்குமுறை சக்தியாகவும்’, தமிழுக்கு எதிரான போக்கை எடுத்த கட்சியாகவும் சித்தரிப்பது, அந்த கட்சியின் பிம்பத்தை இளைஞர்கள் மத்தியில் சிதைக்க வாய்ப்புள்ளது. இது திட்டமிட்டே காங்கிரஸை ஒரு ‘துரோகி’யாக சித்தரிக்க திமுக எடுத்த உத்தியா என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
மாணிக்கம் தாகூர் சமீபத்தில் முன்வைத்த ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த கோரிக்கைதான் இந்த மோதலின் மையப்புள்ளியாக உள்ளது. திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, காங்கிரஸ் ஆட்சியின் கருப்பு பக்கங்களை பராசக்தி படம் மூலம் திமுக ரீ-கால் செய்வதாக கருதப்படுகிறது. அண்ணாவின் தம்பிகளான திமுகவினர், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டப் பழைய வரலாற்றைக் கையில் எடுத்திருப்பது காங்கிரஸை பலவீனப்படுத்தும் ஒரு நுணுக்கமான அரசியல் நகர்வாகும். “நாங்கள் காங்கிரஸை வென்ற வரலாறு இது” என்பதை இந்த படம் உரக்க சொல்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

