தமிழக தேர்தல் களம் எப்போதும் பணத்திற்கும் கொள்கைகளுக்கும் இடையிலான போராட்டமாகவே பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கோடைக்கால வெயிலை சமாளிக்க வழங்கப்பட்ட சிறப்பு நிதியுதவி மற்றும் தேர்தலுக்காகக் கொடுக்கப்பட்ட பணப்பட்டுவாடா போன்றவை மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, பணம் கொடுத்தால் அந்த ஓட்டு நிச்சயம் தங்களுக்குத்தான் என்ற நம்பிக்கையில் இருந்த அரசியல் கட்சிகளுக்கு, தற்போதைய கள நிலவரம் ஒரு பெரும் அதிர்ச்சியாக உருவெடுத்துள்ளது. பணத்தை வாங்கிய மக்கள், வாக்கு சாவடிக்குள் சென்றதும் தங்களின் மனசாட்சிப்படி செயல்பட்டுள்ளது அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுக்க சென்ற கள ஆய்வாளர்களே மக்களின் பதிலை கேட்டு மிரண்டு போயுள்ளனர். மக்களிடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. ஆய்வாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மக்கள் மிக தந்திரமாகவும், அதேசமயம் உறுதியாகவும் பதில் அளிக்கின்றனர். “யாரை கேட்டாலும் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தோம்” என்று பொதுவாக கூறுகிறார்களே தவிர, குறிப்பிட்ட எந்த கட்சிக்கு அல்லது சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை எவரும் வெளிப்படையாக பகிர முன்வருவதில்லை. இந்த மௌனம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிமனைகளில் ஒருவிதமான நிசப்தத்தை உருவாக்கியுள்ளது.
வாக்குக்கு பணம் வாங்குவது என்பது இப்போது ஒரு வழக்கமான விஷயமாகிவிட்டாலும், மக்கள் அந்த பணத்தை சமூகத்தின் மீதான தங்களின் உரிமையாக பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். “கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்வோம், ஆனால் போடும் ஓட்டு எங்கள் எதிர்காலத்திற்கானதாக இருக்கும்” என்ற மனநிலை சாமானிய மக்களிடையே வேரூன்றியுள்ளது.
இந்த விழிப்புணர்வு என்பது வெறும் படித்த இளைஞர்களிடம் மட்டுமல்லாமல், கிராமப்புறத்தில் இருக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களிடமும் அதிகளவில் காணப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. பணநாயகத்தை விட ஜனநாயகமே மேலானது என்பதை மக்கள் தங்களின் மௌன புரட்சி மூலம் உணர்த்த தொடங்கியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கள ஆய்வில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில், “முன்பெல்லாம் மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தயக்கமின்றி சொல்லிவிடுவார்கள், ஆனால் இம்முறை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்” என்கின்றனர். ஒரு தரப்பினர் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து மாற்றத்தை விரும்புகிறார்களா அல்லது புதிய தலைமையின் மீதுள்ள நம்பிக்கையில் மாற்றத்தை தேடுகிறார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது. 5000 ரூபாய் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் கூட மக்களின் நீண்டகால தேவைகளையும், அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யாத நிலையில், அவை வாக்குகளாக மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு மக்கள் கொடுக்கும் ஒரு மறைமுகத் தடா என்றே தோன்றுகிறது.
இறுதியாக, இந்த தேர்தலின் முடிவு என்பது வெறும் ஒரு கட்சியின் வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ மட்டும் இருக்காது; அது தமிழக வாக்காளர்களின் முதிர்ச்சியை உலகிற்கு பறைசாற்றும் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். எக்சிட் போல் கணிப்புகளையே பொய்யாக்கும் அளவிற்கு மக்கள் தங்களின் வாக்குகளை ரகசியமாக பதிவு செய்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் எவ்வளவுதான் மேடைகளில் முழங்கினாலும், மக்களின் மௌனத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய புயல் வீசுவதை உணர முடிகிறது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, பணமா அல்லது மக்களின் மனமாற்றமா எது வென்றது என்பது தெரிந்துவிடும். அதுவரை இந்த மௌனமும், விழிப்புணர்வும் அரசியல் கட்சிகளுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
