Pawan Kalyan on udhayanithi stalin | பவன் கல்யாண் மீது மதுரை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார்

By Keerthana

Published:

மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகரும், ஆந்திர துணை முதல்முறையாக பவன் கல்யாண் முதல்முறையாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என்றும். “சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்” என்ற ஒன்றை நாம் உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தினார்.

இரண்டாவது முறையாக திருப்பதி குறித்து பவன் கல்யாண் வெளியிட்ட பதிவில், “நம்முடைய கலாச்சாரம், நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் மையமான ஸ்ரீ திருப்பதி பாலாஜி தாமின் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதென்றால், நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். வெங்கடேஸ்வரப் பெருமாள் கடவுளின் அருளால் நமக்கும், சனாதனிகள் அனைவருக்கும் இந்த துக்கமான தருணத்தில் நல்ல மன வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, பதினோரு நாட்கள் நோன்பு நோற்பதாக சபதம் எடுத்து வருகிறேன். பதினோரு நாள் பரிகார தீட்சையின் பிற்பகுதியில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி இறைவன் முன் எனது பரிகார தீட்சை நிறைவு செய்ய போகிறேன்” என்று கூறியிருந்தார்.

துணை முதல்வர் பவன் கல்யாண், சமூக வலைதளப்பதிவில் கூறியபடியே, திருப்பதிக்கு பாதயாத்திரையாக மலையில் நடந்து வந்ததுடன், 11ம் நாள் விரதத்தை திருமலையில் நேற்று நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பதி திருமலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நான் ஒரு சனாதன இந்து என்று பெருமையாக கூறிக் கொள்கிறேன். சனாதன தர்மம் மீது எனக்கு அதிக அக்கறை உள்ளது. இங்கு தமிழர்கள் அதிகம் பேர் இருப்பதால், தமிழிலேயே பேசுகிறேன்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும், அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச அவரால் முடியுமா? உங்களால் அழிக்க முடியாது.. நீங்கள் தான் அழிந்து போவீர்கள்” என பேசியிருந்தார்.

இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகாரில் மனுவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வரை ஒருமையில் பேசியுள்ளதாகவும், சமூக நல்லிணக்கத்தை பவன் கல்யாண் பேசியுள்ளதாகவும், சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக வன்மைத்தை கக்கியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.