கானா பாடகர் பாலாவின் அண்ணன் கைது.. போலீஸ் ஸ்டேசனை அதிர வைத்த பாஜக நிர்வாகிகள்

By Keerthana

Published:

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வடசென்னை மாவட்ட பா.ஜனதா தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டார். பிரபல கானா பாடகர் பாலாவின் அண்ணன் ஆகிய இவர் கைது செய்யப்பட்ட தகவலை கேட்டு போலீஸ் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பு அருகே வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கியும், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களித்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் முத்தையா சிவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன், மாவட்ட துணை தலைவர் கணேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் கபிலன், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கொடுத்த புகாரின்பேரில் ெபரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாசர்பாடியில் உள்ள வீட்டில் வைத்து கபிலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கபிலன் கைதான சம்பவம் பற்றி அறிந்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதா நிர்வாகிகள், பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதான கபிலன், பிரபல கானா பாடகர் பாலாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவ கபிலனை தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம்” இவ்வாறு கூறியுள்ளார்.