ரோஹித், கோலி இருந்தும் 12 வருசத்துல ஒரு தடவ இப்படி நடக்கலையே.. ஒரே போட்டியில் கப்பலேறிய மானம்..

Published:

இந்திய அணியில் ஒரு காலத்தில் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் இணைந்து ஆடிய போதிலும், சேவாக் மற்றும் கம்பீர் இணைந்து ஆடிய போதிலும் ஒரு நிச்சயம் இவர்கள் பெரிய அளவிலான ரன்களை இணைந்து குவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்கு மத்தியில் டிராவிட், லட்சுமணன் உள்ளிட்ட பலரும் கூட ஒன்றாக இணைந்து பேட்டிங் செய்தால் நிறைய ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கும்.

அப்படி தற்போதுள்ள இந்திய அணியில் கடந்த பல ஆண்டுகளாக மிக முக்கியமான இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் தான் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர். இவர்கள் இணைந்து ஒரு போட்டியில் பேட்டிங் செய்தாலே இந்திய அணியை தொட்டு பார்க்க முடியாது என்றும் தான் ரசிகர்களே நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

ஒருவர் சொதப்பினால் கூட இன்னொருவர் நிச்சயம் இந்திய அணியை காப்பாற்றி வெற்றியை பெறச் செய்து விடுவார்கள் என்ற உறுதியும் இருக்கும். ஆனால் இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இந்த நம்பிக்கையே ரசிகர்களுக்கு சுக்குநூறாக உடைந்து போயுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் கூட கடைசி போட்டி வரை ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்த நிலையில் இறுதி போட்டியில் அவர் சொதப்பி இருந்தார்.

ஆனால் அதுவரை ஃபார்மில் இல்லாத விராட் கோலி இறுதி போட்டியில் சிறப்பாக ஆடி 70 ரன்கள் கடந்ததுடன் இந்திய அணி கோப்பையை வெல்லவும் முக்கிய பங்கு வகித்திருந்தார். அதே போல தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா மட்டும்தான் அரைசதம் அடித்திருந்தார். மற்ற எந்த வீரர்களும் சிறப்பாக ஆடாத நிலையில், குறிப்பாக கோலியும் தனது பேட்டிங் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால் மிடில் ஆர்டரில் இந்திய அணி பெரிய அளவில் தடுமாற்றம் காண தோல்வியடைந்து தற்போது தொடரை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இணைந்து ஆடிய போதிலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இணைந்து கடைசியாக 14 ஒருநாள் போட்டிகளை இலங்கை மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் ஆடியுள்ளனர். இதில் 12 போட்டிகளில் தொடர்ந்து இருவரும் ஆடும் லெவனில் இணைந்து ஆடிய போது வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் தான், இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி டையாக, தற்போது தோல்வி அடைந்துள்ளனர்.

இதன் மூலம், கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இணைந்து இலங்கை மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் முதல் தோல்வியை ஒரு நாள் போட்டிகளில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...