இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தான் உள்ளது. எனவே, பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால், அது தற்கொலைக்கு சமம் என்று எடப்பாடி பழனிச்சாமி இடம் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி மேலிடத்தின் பயமுறுத்தலை சமாளித்து, பாஜக இல்லாமல் கூட்டணி அமைப்பது எப்படி என எடப்பாடி பழனிச்சாமி தனது நெருக்கமான வட்டாரங்களில் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம், தேமுதிக, பாமக மற்றும் சில கட்சிகளை சேர்த்துக்கொண்டால் போதும் என்றும், பாஜகவை சேர்த்துக் கொண்டால் மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழும் என்றும் அவருக்கு அறிவுரை கூறப்பட்டதாக தெரிகிறது.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் பிரிந்து வந்தாலும், அந்த கட்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், பாஜக வேண்டவே வேண்டாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவேதான், எடப்பாடி பழனிச்சாமி, பாஜக இல்லாமல் திமுக எதிர்ப்பு கோணத்தில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முடிந்தால், சீமான் கட்சியைக் கூட அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு நடந்தால், அதிமுக ஒரு மெகா கூட்டணியாகவும், திமுக ஒரு மெகா கூட்டணியாகவும் இருக்கும் நிலையில், பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து விடப்படும். அப்போது அண்ணாமலை என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தேர்தலுக்கு உள்ள நிலையில், அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.