திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்.. ஜெயித்தால் ஜெயிப்போம்.. இல்லையேல் சினிமாவுக்கு போய்விடுவோம்.. 2031ல் பார்த்துக்கிடலாம்.. தெளிவாக இருக்கிறாரா விஜய்? ஊடகங்கள் தான் குழப்பி விடுகிறதா?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் திராவிட கட்சிகளுக்கு ஒரு புதிய சவால் உருவாகியுள்ளது. குறிப்பாக, விஜய் மீதான ஊடக…

vijay 1

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் திராவிட கட்சிகளுக்கு ஒரு புதிய சவால் உருவாகியுள்ளது. குறிப்பாக, விஜய் மீதான ஊடக விமர்சனங்கள் மற்றும் கள நிலவரங்கள் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாமல் உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் நடந்தபோது, ஊடகங்களில் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனாலும், கள நிலவரப்படி, விஜய்யின் ஆதரவு சிறிதும் குறையவில்லை என்று பரவலான கருத்து நிலவுகிறது.

நெரிசலுக்குக் காரணமானவர்கள் விஜய்யின் கட்சியினர் என்றாலும், இவ்வளவு குறுகலான இடத்தில் பெரிய கூட்டத்துக்கு அனுமதி அளித்த மாநில அரசுக்கும் சம அளவில் பொறுப்பு உள்ளது. நியாயப்படி, அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பல முன்னணி கார்ப்பரேட் ஊடகங்கள் கூட விஜய்யை பாஜகவுடன் இணைத்து, ‘விஜய் – பாஜக கூட்டணி’ அல்லது ‘விஜய்யின் முகத்தில் காவிச் சாயம் பூசும்’ அரசியலை முன்னெடுக்க முயற்சி செய்யலாம் என்று செய்தி வெளியிடுகின்றன. சமூக ஊடகங்களில் விஜய்யை “பாஜகவின் பி டீம்” போல சித்தரிக்கும் பிரசாரமும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து இதுவரை அதிமுகவுடன் கூட்டணி என்றோ, அல்லது என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்தோ எந்த தகவலும் வெளியிடவில்லை. குறிப்பாக விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுவது என்னவெனில், நிச்சயம் விஜய் அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்றே தெரிவித்து வருகின்றனர்.

திராவிட கட்சிகள் எப்போதும் பயன்படுத்தும் வழக்கமான அரசியல் வியூகம் என்னவெனில், புதிய எதிரிகளை தேசிய கட்சிகளுடன் இணைத்து காண்பிப்பதாகும். விஜயகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோது இதேமாதிரி பாஜகவின் ‘பி’ டீம் என விமர்சனம் செய்யப்பட்டது. அதுபோல் விஜய்க்கும் எதிராகவும் தற்போது அதே வியூகம் பயன்படுத்தப்படுகிறது.

விஜய் கட்சி, தனது அரசியல் கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது, திராவிடக் கட்சிகள் மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பிலிருந்தும் விலகியே நின்றது. “திமுகவும் எதிரி, பாஜகவும் எதிரி” என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார்.

ஆனால், தற்போது உள்ள அரசியல் சூழல், மாநில அரசு மற்றும் மத்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக, ஒரே நேரத்தில் இருபெரும் சக்திகளையும் எதிர்த்து நிற்பது இயலாத காரியம் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் விஜய் இதையெல்லாம் காதில் போட்டு கொள்ளவே இல்லை. திமுக பக்கமும் போகாமல், அதிமுக பக்கமும் போகாமல் ஜெயித்தால் ஜெயிப்போம், இல்லையென்றால் 2031ல் பார்த்து கொள்ளலாம், அதுவரை இருக்கவே இருக்கிறது சினிமா என்ற முடிவில் தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில், விஜய்யின் அரசியல் என்பது பத்தோடு பதினொன்றாக வரும் அரசியல் அல்ல; திராவிட கூட்டணியின் பாரம்பரிய வாக்குகளை உடைக்கும் அடித்தள அரசியல் சவாலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சவாலை மற்ற கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்தே, தமிழகத்தின் எதிர்கால அரசியல் தீர்மானிக்கப்படும்.