இந்தியாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தாவுக்கு, இந்தியா முழுவதும் ரூ.30,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அவருக்கு பின் யாருக்கு என்பதற்கான கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்தியாவில் சட்ட நெருக்கடி அதிகமானதை அடுத்து, நித்தியானந்தா தனது சொத்துக்களை இரண்டு அறக்கட்டளைகளின் பெயரில் எழுதி வைத்ததாகவும், 156 நாடுகளில் உள்ள தனது ஆசிரமங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி என்று கூறப்படும் நிலையில், இந்த சொத்துக்களை யார் நிர்வாகம் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நித்தியானந்தாவுக்கு நெருங்கிய உறவினராக இருந்த, சேலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தற்போது அவரது சொத்துக்களை பராமரித்து வருவதாகவும், நித்தியானந்தா பேரில் உள்ள இரண்டு அறக்கட்டளை மூலம் இந்த சொத்துக்கள் பராமரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளைகளுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் 4000 கோடி ரூபாய் எனவும், வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் மதிப்பு 26 ஆயிரம் கோடி எனவும் கூறப்படுகிறது. மொத்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை யார் நிர்வாகம் செய்வது என்ற போட்டி தற்போது வெடித்துள்ளது.
நித்தியானந்தாவுக்கு நெருக்கமான ஒரு நடிகை, இந்த சொத்துக்களை நிர்வாகிக்க முயற்சி செய்வதாகவும், ஆனால் எந்த அறக்கட்டளையிலும் உறுப்பினராக அவர் இல்லாததால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நித்தியானந்தா அந்த நடிகையின் பெயரில் எந்த சொத்துக்களையும் எழுதி வைக்கவில்லை என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், “கைலாசா” என்ற தனி நாட்டை அவர் உருவாக்கியதாக கூறப்பட்டாலும், அது ஒரு கற்பனை தான் என்றும், ஆனால் தற்போது அவர் ஈக்வடார் நாட்டில்தான் இருப்பதாகவும், அவ்வப்போது நடுக்கடலில் சில மாதங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து நிர்வாகிக்க வேண்டும் என்று அவரது உண்மையான பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.