2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த லேட்டஸ்ட் கருத்துக்கணிப்புகள், ஆளும் திமுக கூட்டணிக்கு ஒரு கலவையான செய்தியையே வழங்குகின்றன. தற்போதைய நிலவரப்படி, திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு குறைவு என்றாலும் திமுக கூட்டணி நூலிழையில் பெரும்பான்மையை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், கடந்த தேர்தலை போலன்றி, இம்முறை வெற்றி வாய்ப்பு மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் நிம்மதியை அளித்தாலும், மறுபுறம் ஆட்சி அமைப்பதில் ஏற்படப்போகும் சிக்கல்களை இப்போதே அரசியல் நோக்கர்கள் கோடிட்டு காட்ட தொடங்கியுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்புகளின்படி, திமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க முடியாமல், கூட்டணி கட்சிகளின் தயவு அத்தியாவசியமாக இருக்கும். ஏற்கனவே விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்கு பின், கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம்பிடிக்க பிடிவாதம் பிடித்தால், அது திமுக-விற்கு பெரும் தலைவலியை உருவாக்கும். 2016 தேர்தலில் வெறும் 89 தொகுதிகளை மட்டும் வென்று கூட்டணி கட்சிகளுக்கு பதவியை பகிறாமல் ஆட்சி அமைத்த மாதிரி 2026ல் அட்சி அமைக்க முடியாது என்றும், ஆட்சியில் பங்கு என்ற சமரசம் எட்டப்படாத பட்சத்தில், அதிருப்தி அடையும் கட்சிகள் ஆதரவை விலக்கினால், ஆட்சி பாதியிலேயே கவிழும் ஆபத்து இருப்பதாகவும், இது தமிழகத்தில் ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
மறுபுறம், இந்த தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியமாக நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ உருவெடுக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி, விஜய் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கும் சூழல் உருவாகலாம். அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளைத் தவெக கணிசமாகப் பிரிப்பதால், இரண்டாம் இடத்தை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக விஜய் சட்டசபைக்குள் நுழைவார். இது தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக-அதிமுக இருமுனை போட்டியை உடைத்து, புதியதொரு முக்கோண போட்டியை உருவாக்கும்.
விஜய் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றால், அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும். அவர் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தால், அவர் தனது முதலமைச்சர் கனவுக்காக 2031-ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. தமிழக அரசியலில் நிலவும் ஸ்திரமற்ற சூழல் மற்றும் கூட்டணி குழப்பங்களால், ஆட்சி மாற்றம் என்பது சில ஆண்டுகளிலேயே நிகழக்கூடும். விஜய் மக்கள் மத்தியில் ஒரு வலுவான பிம்பத்தை உருவாக்கினால், அது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக மாறும்.
அரசியல் கணிப்புகளின்படி, திமுக ஆட்சி அமைத்தாலும் கூட்டணி முரண்பாடுகளால் 2 அல்லது 3 ஆண்டுகளில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. அத்தகைய முன்கூட்டியே வரும் தேர்தல், விஜய்க்கு ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். முதல் தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவராகி, பின் குறுகிய காலத்தில் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பது என்பது இந்திய அரசியலில் அரிதான ஒரு சாதனையாக இருக்கும். ஆனால், இதற்கு தவெக-வின் அடிமட்ட கட்டமைப்பு மற்றும் விஜய்யின் அரசியல் முதிர்ச்சி மிக முக்கியமாகும்.
சுருக்கமாக சொன்னால், 2026 தேர்தல் என்பது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. திமுக நூலிழையில் வென்றாலும், அதன் ஆயுட்காலம் கூட்டணி கட்சிகளின் கைகளிலேயே உள்ளது. விஜய் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்தி கொண்டால், அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழகத்தின் முதலமைச்சராக அவர் முடிசூடும் காலம் வரலாம். இதனால், வரவிருக்கும் தேர்தல் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘ரீ-செட்’ பட்டனை அழுத்தும் என்பதில் ஐயமில்லை. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாற்றங்களை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
