மாரிதாஸ் கைதும் உடனடி விடுதலையும்.. அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்வே கூடாதா? மக்களுக்கு பேச்சுரிமை இல்லையா? விஜய் மீது மொத்த பழியையும் போட்டு தமிழக அரசு தப்பிக்க பார்க்கின்றதா? கிஷோர் கே சுவாமி கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!

சமீபத்தில் கரூரின் நடந்த துயர சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக கூறி, அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிகழ்வு பெரும்…

kishore k swamy

சமீபத்தில் கரூரின் நடந்த துயர சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக கூறி, அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களின் பின்னணியில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திமுக அரசை விமர்சனம் செய்ததற்காக கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டபோது, இணையத்திலும் ஊடகங்களிலும் ஒருமித்த குரலில் திமுக அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. “எங்களுக்குப் பேச்சுரிமை இல்லையா? நியாயத்தை யாரும் பேசக்கூடாதா?” “எல்லோருடைய வாயையும் இப்படித்தான் அடைக்கப் போகிறீர்களா? இது ஒரு நல்லாட்சியா?” “மக்களுக்கான நலனைப் பற்றிச் சிந்திக்காமல், இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேறு வேலையே இல்லையா?” என்ற கேள்விகள் எழுந்தன.

இதேபோல் தற்போது மாரிதாஸ் அவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் உடனே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் யூ.பீஸ் (U.P.S – Under Process Servers/ Police)” என்று பதிவிட்டு, தனது வழக்கமான துணிச்சலான பாணியை தொடர்ந்தார்.

மாரிதாஸ் கைது குறித்து கிஷோர் கே சாமி பேட்டி ஒன்றில் கூறுகையில் “இந்த அரசாங்கம் ஒரு பதட்டத்தின் உச்சத்தில் இருக்கிறது. என்ன செய்வது, யாரை கைது செய்வது, எதற்காக கைது செய்வது என்று தெரியாமல், யார் எதை பேசினாலும் உடனே அவர்கள் மீது பாய்கிறது.

கரூரில் நடந்த சம்பவங்களுக்கு பின்னணியில், அரசின் நிர்வாக திறமையின்மை ஒரு காரணம். இந்த விவகாரத்தை முழுமையாக திசை திருப்பவே எதிர்க்கருத்துகளை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கரூரில் நடந்த விவகாரத்தில், விஜய் ஒரு முக்கிய கருவியாக இருந்ததாகவும், அவர் மீது மொத்த பழியையும் போட்டு தப்பிக்கலாம் என திமுக அரசு நினைத்ததாகவும் கிஷோர் கே. சாமி குறிப்பிட்டார்.

“திமுக, சில ஊடகங்களை வைத்து, விஜய்யை ‘உளவியல் ரீதியாக அசிங்கப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும்’ முயற்சி செய்கிறது. அவருக்கு ‘சைக்கோ’ போன்ற முத்திரைகளை குத்தி அவரைப்பலவீனப்படுத்தப் பார்க்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

விஜய் தரப்பு, ஆரம்ப மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக கூறி மௌனம் காத்ததால், அந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு “திமுக வெறியாட்டம் ஆடியது” என்றும் குற்றம் சாட்டினார்.

கரூரில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படும் செந்தில் பாலாஜி குறித்த நிதி முறைகேடு புகார்களையும் கிஷோர் கே. சாமி முன்வைத்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி பாஜகவின் வாஷிங் மெஷின் என்று ஸ்டாலின் விமர்சித்ததை குறிப்பிட்டு, “2018-19 காலகட்டத்தில் செந்தில் பாலாஜியை பற்றிக் கொலை, கொள்ளை என்று குற்றம் சாட்டிய நீங்களே, இப்போது அவர் கைது செய்யப்பட்டபோது ‘தியாகி’ என்று சொல்கிறீர்களே, அப்போ எந்த ‘வாஷிங் மெஷினில்’ அவர் நுழைந்தார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விமர்சகர்கள் பேசுவதை தடுக்கவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கிஷோர் கே. சாமி மீண்டும் வலியுறுத்தினார்.

மாரிதாஸ் சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டாலும், அவருக்கு ஒரு குடும்பம் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். “அப்பாவை அழைத்து செல்கிறார்கள்” என்று குழந்தைகள் பார்க்கும் சூழலை உருவாக்குவது உளவியல் ரீதியான கொடுமை. இது மிரட்டல் நடவடிக்கையே தவிர, சட்டப்படி செயல்படுவது இல்லை” என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

போலீஸார் கைதுக்குப் பதிலாக, சம்மன் கொடுத்து அழைத்து சென்று விசாரணை நடத்தலாம். ஆனால், வீட்டுக்கு வந்து அதிகாலையில் தூக்கி செல்வது விமர்சனங்களை எதிர்கொள்ள துணிவில்லாததை காட்டுகிறது என்றும் அவர் சாடினார்.

அரசுக்கு எதிராக பேசும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு “விமர்சகர்கள் சட்டரீதியாக பேசுங்கள். கேள்வி கேளுங்கள். நீதிபதி ஒன்றும் கடவுள் அல்ல. நீதிபதியின் கருத்து தவறானது என்று சொல்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. தலைமை பண்பு குறித்து முடிவெடுக்க நீங்கள் யாருமில்லை; உங்களின் தனிப்பட்ட கருத்துகளை பேசுவதற்கு மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.” என்று தெரிவித்தார்.

கிஷோர் கே. சாமி கூற்றுப்படி, இந்த கைது நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான மனநிலையை மேலும் அதிகரித்துள்ளன. உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்போது, அதை பேசும் அனைவரும் தயாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.