தமிழ்நாடு காவல்துறையின் ‘காவல் உதவி’ செயலி, மக்கள் பாதுகாப்பாக உணர உருவாக்கப்பட்ட ஒரு முக்கியக் கருவி. ஆரம்பத்தில் பெண்களுக்காக உருவாக்கப்பட்டாலும், இப்போது அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவசர உதவி, புகார் அளித்தல், காவல் நிலையத்தை கண்டறிதல் போன்ற பல சேவைகளை இந்த செயலி வழங்குகிறது.
செயலியின் முக்கிய அம்சங்கள்.. அவசர உதவி:
சிக்கலான சூழ்நிலைகளில், செயலியின் ‘அவசரம்’ (Emergency) பொத்தானை அழுத்தினால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் செல்லும். போனை இரண்டு முறை அசைப்பதன் (Shake Trigger) மூலமும் உதவி கோரலாம். இதன் மூலம், உங்களின் நேரடி வீடியோ மற்றும் இருப்பிட தகவல் காவல்துறைக்கு அனுப்பப்படும்.
புகார் அளித்தல்:
நேரில் காவல் நிலையம் செல்ல தயங்குபவர்கள், இந்த செயலி மூலம் புகார்களை பதிவு செய்யலாம். குரல் வழி புகார் (Voice Complaint) அல்லது மொபைல் புகார் (Mobile Complaint) அளிக்கும் வசதி இதில் உள்ளது. புகார் அளித்த பிறகு, அதன் நிலையை சரிபார்க்கவும் முடியும்.
சம்பந்தப்பட்ட புகார்கள்:
பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்கள், வரதட்சணை, பாலியல் துன்புறுத்தல், ஆன்லைன் பண மோசடி, காணாமல் போனோர், வாகனங்கள் காணாமல் போனது போன்ற பலவிதமான புகார்களைப் பதிவு செய்ய முடியும்.
இடத்தைப் பகிர்தல் (Location Sharing):
தனியாக பயணிக்கும்போது, உங்கள் இருப்பிடத்தை நம்பிக்கைக்குரிய மூன்று நபர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இது பாதுகாப்பான பயணத்திற்கு உதவும்.
மற்ற சேவைகள்:
காவல் நிலைய இருப்பிடம் (Police Station Locator): அருகிலுள்ள காவல் நிலையங்களைக் கண்டறிய உதவும்.
கட்டுப்பாட்டு அறைத் தொடர்பு (Control Room Directory): அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளின் எண்கள் இதில் கிடைக்கும்.
ஆன்லைன் மோசடிப் புகார்கள் (Cyber Financial Complaints): இணையவழி நிதி மோசடிகள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய இந்த அம்சம் உதவுகிறது.
இந்த செயலி, உங்கள் மொபைலில் எப்போதும் சார்ஜ் மற்றும் நெட்வொர்க்குடன் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், அவசர காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யலாம். டிஜிட்டல் முறையில் புகார்கள் பதிவாவதால், அவை நம்பகத்தன்மையுடன் இருக்கும், அலைக்கழிப்புகள் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
இவ்வளவு பயனுள்ள செயலியை https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&pcampaignid=web_share&pli=1 என்ற லிங்கில் சென்று உடனே டவுன்லோடு செய்யுங்கள்..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
