கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 உயிர்களை பலி கொண்டது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக-வின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் நடைபெற்ற வாதங்களும், நீதிபதியின் கருத்துகளும் என்ன என்பதை பார்ப்போம்.
விசாரணையின் தொடக்கத்தில், நீதிபதி பரத்குமார் கைது செய்யப்பட்ட மதியழகனிடம், “போலீசார் உங்களை தாக்கினார்களா? என்ன காரணத்திற்காக கைது செய்தார்கள் என்று கடிதம் கொடுத்தார்களா?” என்று கேள்விகளை எழுப்பினார். அதற்கு மதியழகன், எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்றும், புகார் கடிதம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பதிலளித்தார்.
காவல்துறை தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தபோது, ‘கூட்ட நெரிசலுக்கு காரணம், தவெக-வின் தவறான ஏற்பாடுகள்தான். தவெக-வின் கோரிக்கையை ஏற்று, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஒப்புதலுடன் வேலுசாமிபுரம் பகுதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், “10,000 பேர் மட்டுமே வருவார்கள்” என்று தவெக தரப்பு தெரிவித்த நிலையில், 30,000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றபோது, அதை முறையாக கையாளத் தவறிவிட்டதாக காவல்துறை வாதிட்டது.
அதற்கு தவெக தவெக வழக்கறிஞர், முதலில் “லைட் ஹவுஸ் கார்னர்” பகுதியை அனுமதி கேட்டதாகவும், காவல்துறை அதை மறுத்து, வேலுசாமிபுரத்திற்கு அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், “கூட்டத்திற்கு காசு கொடுத்து ஆட்களை அழைத்து வரவில்லை, வண்டிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க மக்கள் தாங்களாகவே விஜய்யை பார்க்க வந்தனர். கட்சிக்காரர்களை நாங்கள் கட்டுப்படுத்தலாம், ஆனால் மக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு தான் உண்டு” என்று உணர்ச்சிபூர்வமாக வாதிட்டார்.
நீதிபதி பரத்குமார், தவெக தரப்பிடம், “காலாண்டு விடுமுறை, வார விடுமுறை என்று தெரிந்தும், விஜய்யை பார்க்க குறைந்த அளவு கூட்டம்தான் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தவெக வழக்கறிஞர், “நாங்களே இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தால் எங்களுக்குத்தான் அதிக வருத்தம். எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டனரே என்று விஜய்க்கு மிகுந்த மன வருத்தம்” என்று தெரிவித்தார். மேலும், சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனை எடுத்துக்கொடுத்திருந்தால், பிரசாரம் எளிதாக இருந்திருக்கும் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிபதி, “எனது மனசாட்சிக்கு இணங்கவே தீர்ப்பு வழங்குவேன்” என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தார். இந்த சம்பவம், தவெக-வின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகவும், சவாலாகவும் மாறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
