தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல், சாதி மற்றும் மத அடையாளங்களை கடந்து ஒரு புதிய விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் பழைய “மதவாத அரசியல்” கையில் எடுக்கப்படுவது வேதனையளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவர் முதலமைச்சராகக் கூடாது என்கிற ரீதியிலான பரப்புரைகள் திரைமறைவில் திட்டமிட்டு தொடங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முற்படுவதை ஒரு “மத ரீதியிலான கூட்டணி” என சித்தரிக்கச் சில சக்திகள் முயல்கின்றன. மக்களால் பெருவாரியான வாக்குகள் அளிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை, அவரது மத அடையாளத்தைச் சுட்டிக்காட்டி முடக்க நினைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
இந்த ஒட்டுமொத்த அரசியல் குழப்பங்களுக்கும் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் “மாஸ்டர் பிளான்” இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலமான பேச்சு எழுந்துள்ளது. தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பா.ஜ.க., விஜய்யின் அசுர வளர்ச்சியை கண்டு அஞ்சி, ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. கொள்கை ரீதியாக ஒருவருக்கொருவர் முட்டிக்கொள்ளும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து, விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சியை தகர்க்க அமித்ஷா காய்நகர்த்துவதாக கூறப்படுகிறது. “திராவிட மாடல்” மற்றும் “அண்ணா நாமம்” என்று பேசிக்கொண்டிருந்த கட்சிகள், டெல்லியின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஒரே நேர்க்கோட்டில் நிற்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை, ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அதிகாரத்தை பயன்படுத்தி முடக்குவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்க்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்காமல், 118 எம்.எல்.ஏ-க்களின் கடிதத்தை கேட்டு முட்டுக்கட்டை போடுவது திட்டமிட்ட ஒரு சதி. இந்த சதி திட்டத்தில் டெல்லி மேலிடம், கோட்டை மற்றும் எடப்பாடியின் தரப்பு என அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது, விஜய்யின் பலத்தை விட அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது. ஒரு இளைஞனின் எழுச்சியை தடுக்க இத்தனை பேர் ஒன்று சேருவது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகவே கருதப்படும்.
காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருப்பது திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகத் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தற்போது மாற்றத்தை நோக்கி விஜய்யுடன் கைகோர்த்திருப்பதை ஜீரணிக்க முடியாத சக்திகள், அதற்கு மத சாயம் பூச முயல்கின்றன. ஆனால், தமிழக மக்கள் எப்போதும் மதவாத அரசியலை விட, சமூக நீதியையும் நேர்மையான மாற்றத்தையுமே முன்னிறுத்துபவர்கள். எத்தனை பேர் ஒன்று சேர்ந்து சதி செய்தாலும், ஒரு நேர்மையான மனிதன் ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட முடியாது. அதிகாரப் பசியில் ஆடும் இந்த ஆட்டத்திற்கு மக்கள் மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
இறுதியாக, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மமே இறுதியில் வெல்லும் என்பது விஜய்யின் தற்போதைய நிலைக்குப் பொருந்தும். அதிகாரத்தைப் பயன்படுத்தி விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுவதும் ஒரு கோழைத்தனமான செயல். மக்களை மதிக்காமல், தங்களின் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்த அரசியல்வாதிகள், இதற்கெல்லாம் சேர்த்து ஒருநாள் அனுபவிப்பார்கள் என்பது உறுதி. மக்கள் தீர்ப்புக்குத் துரோகம் இழைக்கும் எவரும் வரலாற்றில் நிலைத்திருந்ததாகச் சரித்திரம் இல்லை. சதிகாரர்களின் கூட்டணிகள் உடைந்து, மக்களின் ஆதரவுடன் ஒரு புதிய தமிழகம் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
