தமிழக அரசியல் களம் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய சக்தியின் எழுச்சியால் பரபரப்படைந்துள்ளது. எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிட போவதாக விஜய் சூசகமாக அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் பாரம்பரிய கூட்டணி அரசியலுக்கு எதிரான ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தனித்து போட்டியிடும் முடிவானது, முன்னாள் அரசியல் ஆளுமைகளின் பாதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், திராவிட கட்சிகளின் உச்சபட்ச தலைவர்களாக விளங்கிய மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி கால வெற்றிகள் அனைத்தும் வலுவான கூட்டணிகளின் அஸ்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டவை என்பது தெளிவாகிறது.
மு. கருணாநிதி அவர்கள், பல சந்தர்ப்பங்களில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வாக்கு வங்கியை ஒருங்கிணைத்துதான் ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடித்தார். அதேபோல, ஜெயலலிதா அவர்களும் 2011 சட்டமன்ற தேர்தலை தவிர பல தேர்தல்களில் வலுவான கூட்டணிகளை அமைத்தே கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க.வை சந்தித்து, வெற்றி வாகை சூடினார்.
இந்த இரு பெரும் தலைவர்களும், தமிழக வாக்காளர்களின் சிக்கலான சாதி மற்றும் வாக்களிப்பு வடிவங்களை புரிந்துகொண்டு, வெற்றி பெறுவதற்கு சமரசக் கூட்டணி அவசியம் என்பதை தங்கள் அரசியல் வாழ்நாள் முழுவதும் நிரூபித்துள்ளனர். இவர்களின் அரசியல் பலமே, கூட்டணி அமைக்கும் சாதுர்யம் மற்றும் தலைமையின் மீது மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தான்.
விஜய் இன்று தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தையும், கணிசமான வெகுஜன கவர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவருடைய திரைப்பட செல்வாக்கு, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தங்கள் அரசியல் சகாப்தத்தில் கொண்டிருந்த அரசியல் ஆளுமை மற்றும் மக்கள் செல்வாக்கு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கதா என்ற கேள்வி எழுகிறது.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் நீண்ட அரசியல் போராட்டங்கள், சிறைவாசம் மற்றும் அரசாங்க நிர்வாக அனுபவம் ஆகியவற்றின் மூலம் தங்கள் ஆளுமையை பெற்றனர். இந்த ஆழமான அரசியல் பிண்ணனி விஜய்க்கு இல்லை. திராவிடக் கட்சிகள், அவற்றின் கொள்கைகள் மற்றும் அடித்தள தொண்டர்களின் மூலம் ஒரு நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன. விஜய்யின் ரசிகர் பலம் வாக்குகளாக மாறுவதற்கு, ஒரு நிலையான அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பகத்தன்மை தேவை.
எனவே, தற்போது தனித்து போட்டியிடுவதன் மூலம், அவர் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவை விட அதிக மக்கள் செல்வாக்கு உடையவர் என்று நிரூபிக்க வேண்டிய பெரிய சவாலில் இருக்கிறார்.
கூட்டணி அரசியலின் யதார்த்தத்தை புறக்கணித்து தனித்துப் போட்டியிடும் முடிவை விஜய் எடுத்தால், அவர் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள இதுபோன்ற அரசியல் தலைவர்களின் கதியை எதிர்கொள்ள நேரிடலாம். உதாரணமாக, அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலில் மாற்றத்தை கொண்டுவர ‘ஜன் சுராஜ்’ என்ற இயக்கத்தை தொடங்கித் தனித்து போட்டியிட்டார். ஆனால், சமீபத்திய பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நேர்மையான முயற்சி இருந்தும் அவர் தோல்வியை தழுவியதை காட்டுகிறது. இரண்டு பெரிய அரசியல் அணிகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மாநிலத்தில், மூன்றாவது அணி அமைப்பது அல்லது தனித்து போட்டியிடுவது என்பது மக்களின் வாக்குகள் சிதறுவதைத் தவிர, வெற்றியை கொடுப்பது கடினம்.
விஜய் தனித்து போட்டியிட்டால், அவர் கணிசமான சதவீத வாக்குகளை பிரித்து, மற்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கலாம். ஆனால், அது அவர் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு வழிவகுக்குமா என்பது சந்தேகமே. எனவே ஆந்திர அரசியலில் வெற்றியை ஈட்ட சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் பின்பற்றிய ஃபார்முலா, விஜய்க்கு ஒரு நல்ல பாடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் தி.மு.க.வுக்கு வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி அமைத்தால், அது அவருக்கும் அவரது கட்சிக்கும் அரசியலில் உடனடியாக ஒரு ‘லிஃப்ட்’ ஆக அமையலாம்.
தனித்து போட்டியிட்டு உடனடியாக ஆட்சியைப் பிடிப்பது என்பது தமிழகத்தின் கூட்டணி அரசியலில் சாத்தியமற்றது. மக்கள் செல்வாக்கு இருந்தாலும், அதை தேர்தல் வெற்றியாக மாற்ற, மற்ற கட்சிகளுடன் இணைந்து வாக்கு வங்கியை பெருக்குவது அவசியமாகிறது. விஜய் தனித்து போட்டியிடுவது அவரது அரசியல் அடித்தளத்தை உருவாக்க ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம். ஆனால், உடனடியாக அதிகாரத்தை பெற வேண்டுமென்றால், ஆந்திராவில் பவன் கல்யாண் பின்பற்றிய கூட்டணி ஃபார்முலா அவருக்கு சிறந்த மற்றும் நடைமுறை சாத்தியமான வழியாக இருக்கும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
