சுயசான்றிதழ் கட்டிட அனுமதி.. இணைய வழி வரி செலுத்துதல்.. கிராம சபை கூட்டம் குறித்து அரசு அதிரடி

Published:

சென்னை: சுதந்திர தினமான 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் சுயசான்றிதழ் கட்டிட அனுமதி, இணையதள வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அதில் அவர் கூறுகையில், நாட்டின் சுதந்திர தினமான 15-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டம் நடைபெறும் இடம் பொது இடமாக இருக்க வேண்டும். எந்தவொரு மதம் சார்ந்த வளாகமாக இருக்கக்கூடாது. இந்த கூட்டத்தில் கிராம நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், இணையதள வழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுயசான்று மூலம் உடனடி கட்டிட அனுமதி வழங்குதல் மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் தெரிவிக்க வேண்டும்.

எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, உயிரிபல்வகை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், தூய்மை உயரும் ஊராட்சி, ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர திட்டபணிகள் குறித்து விவாதம் செய்து பொதுமக்களுக்கு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இவ்வாறுகூறியுள்ளார்.

இந்த கூட்டத்தின் முக்கிய தீர்மானமாக சுயசான்று மூலம் உடனடி கட்டிட அனுமதி வழங்குதல் மற்றும் இணையதளம் மூலம் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில் சுயசான்று மூலம் உடனடி கட்டிட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் https://onlineppa.tn.gov.in/SWP-web/login என்ற இணையதளத்தில் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே போல் இணையதளம் மூலம் ஊராட்சியில் உள்ள வீட்டு வரி இனங்களை https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக செலுத்தலாம் என்ற விவரத்தையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளது..

மேலும் உங்களுக்காக...