லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகும் அரசு ஊழியர்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

By Keerthana

Published:

சென்னை: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காத வழக்குகள் எத்தனை உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருக்கழுங்குன்றம் பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் பி.பொன் பாண்டியன் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் கடந்த 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பொன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ”ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்துக்கு பணியிடை நீக்கத்தில் அவரை வைத்திருக்க முடியாது. எந்த வேலையும் வாங்காமல் 75 சதவீத ஜீவன படி வழங்குவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், அவரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி., மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி, பொன் பாண்டியனுக்கு எதிரான விசாரணையை ஓராண்டுக்குள் முடித்து இருக்கவேண்டும்.

5 ஆண்டுகளாகியும், விசாரணையை முடிக்காமல், அவரை பணியிடை நீக்கத்திலேயே அதிகாரிகள் வைத்துள்ளனர். 5 ஆண்டுகள் அவருக்கு வேலை வழங்காமல், ஊதியத்தில் 75 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை, குறித்த காலத்துக்குள் பொன்பாண்டியனுக்கு எதிரான விசாரணையை முடிக்காத அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்” என்று கண்டன கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர், ‘அதிகாரிகள், அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளையும் அமல்படுத்துவது இல்லை. உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் செயல்படுத்துவது இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு எதிரான துறை ரீதியான விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காமல், எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து 2 வாரத்துக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.