மும்பை: தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றால், 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து விவாகரத்து வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தம்பதிக்கு கல்யாணம் நடந்தது. ஒரு ஆண்டுக்கு பிறகு 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழத்தொடங்கிவிட்டார்கள் அதன்பிறகு மீண்டும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் 2 பேரும் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
மேலும் விவாகரத்துக்கான 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து உடனடியாக விவாகரத்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எனினும் குடும்ப நல நீதிமன்றம் 6 மாத காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.
இதையடுத்து அவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ‘‘எங்களால் இனி சேர்ந்து வாழவே முடியாது. எனவே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பது எங்களுக்கு மன ரீதியாக வலியை தருகிறது. எனவே கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து எங்களின் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்
இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுரி கோட்சே விசாரித்தார். விசாரணை நிறைவில், நீதிபதி, 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தில் இருந்து விலக்கு அளித்து புனே தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். இதுதொடர்பாக நீதிபதி அளித்த உத்தரவில் கூறுகையில், “யாருக்கும் அநீதி ஏற்பட்டு விடக்கூடாது. தம்பதி மீண்டும் சேர்ந்த வாழ வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தவே 6 மாத கட்டாய காத்திருப்பு காலம். அதே நேரத்தில் தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதையும், அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பில்லை என தெரிந்த பிறகு, குடும்ப நல நீதிமன்றம் யதார்த்தத்தை பின்பற்றி, காத்திருப்பு காலத்தை ரத்து செய்வதற்கான விருப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
வளர்ந்து வரும் சமுதாயத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களை கண்டு, திருமணத்தை முறித்து கொள்ள விரும்பும் தம்பதிக்கு உதவுவதில் நீதித்துறையின் பங்கு முக்கியமனாது. யதார்த்த நிலையை கோர்ட்டு பின்பற்ற வேண்டும். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் ஏற்படும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்க தம்பதிக்கு கட்டாய காத்திருப்பு காலத்தில் இருந்து விலக்கு அளிப்பது நீதிமன்றங்களின் கடமை” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.