கெளரவ விரிவுரையாளா் பணிக்கு நோ்முகத் தோ்வு எப்போது? சம்பளம் எவ்வளவு? அமைச்சா் பொன்முடி தகவல்!

By Bala Siva

Published:

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு எப்போது என்ற தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்த பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று அமைத்து பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘ அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கெளரவ விரிவுரை பணியிடங்களை அந்தந்த கல்லூரியின் முதல்வர்களே நிரப்பிக் கொள்ளும் முறை கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டது என்றும், அதனால் பல்வேறு குளறுபடிகள், முறைகேடு நடந்தது என்றும் தெரிவித்தார்.

இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு நேர்முகத் தேர்வு நடத்தி கௌரவ விரிவுரையாளர் பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்கள் பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த நேர்முகத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி வரை பாடவாரியாக நடைபெறும் என்றும் ஜனவரி 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றவர்களுக்கு 4ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுவரை கெளரவ விரிவுரையாளர் பணிக்கு 1895 காலியிடங்களுக்கு 9,915 பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கௌரவ விரிவுரையாளராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.