தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றும், அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் பா.ஜ.க. இடம்பெறும் என்றும் அமித்ஷா தொடர்ந்து கூறிவரும் நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைந்ததாக கூறப்பட்டது. “பா.ஜ.க.வினர் அமைச்சர் ஆவதற்காக நாம் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?” என்று அ.தி.மு.க. தொண்டர்கள் பேச தொடங்கிவிட்டதை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிரடியாக “அ.தி.மு.க. தனித்துத்தான் ஆட்சி அமைக்கும்” என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். “கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறி வருவதை அ.தி.மு.க. தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியை அவ்வளவு சாதாரணமாக எடை போட முடியாது. ஜெயலலிதாவையே தனது கைக்குள் வைத்திருந்ததாக கூறப்பட்ட சசிகலாவையே அவர் ஓரம் கட்டியவர். தற்போது சசிகலா இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமிதான். தி.மு.க.வையே டெபாசிட் இழக்க செய்தவர் டி.டி.வி. தினகரன். ஆனால், அவரால் கூட எடப்பாடி பழனிசாமியை ஒன்றுமே செய்யவில்லை. இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர். ஆனால், அவர் கூட இப்போது கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சும் நிலைமை உள்ளது. எனவே, தன்னுடைய எதிரியாக இருந்தாலும் சரி, தன்னுடனே இருந்து குழிபறிப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.
எனவே, அமித்ஷாவின் பயமுறுத்தல்களுக்கெல்லாம் எடப்பாடி பயப்பட மாட்டார். கண்டிப்பாக 118 என்ற மேஜிக் நம்பரை அ.தி.மு.க. தொட்டுவிட்டால், அவர் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அதுமட்டுமின்றி, இப்போது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இருந்தாலும், டிசம்பருக்கு பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை அவர் கழட்டிவிட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, இப்போது நிலையை வைத்து எடப்பாடி பழனிசாமியை குறைவாக எடை போட வேண்டாம் என்றும், கண்டிப்பாக வரும் தேர்தலில் அவர் தனது கட்சித் தொண்டர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு முடிவைக் கொண்டு வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. எனவேதான், அவ்வப்போது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இனி ஒவ்வொரு மீட்டிங்கிலும் அவர் “அ.தி.மு.க. தனித்துத்தான் ஆட்சி அமைக்கும்” என்று பேச இருப்பதாகவும், அமித்ஷாவின் கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை, கட்சித் தொண்டர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம் என்று அவர் முடிவு செய்துவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி தற்போது தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், அடுத்தடுத்து அவர் எடுக்கும் பல நடவடிக்கைகள் கட்சியை ஒரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.