தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் எதிர்பாராத திசைகளில் நகர தொடங்கியுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பக்கம் நின்ற ராமதாஸின் பாமக, தற்போது திமுக தலைமையிலான கூட்டணிக்குத் தாவக்கூடும் என்ற யூகங்கள் பலமாக எழுகின்றன. அமித்ஷாவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக ஏற்கனவே அங்கம் வகித்தாலும், வட மாவட்டங்களில் தனது செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்த திமுகவின் கரங்களைப் பற்றிக் கொள்வதுதான் பாதுகாப்பான வழி என டாக்டர் ராமதாஸ் தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது நிஜமானால், ஆளுங்கட்சிக்கு அது ஒரு மிகப்பெரிய பலமாக அமையும்.
மறுபுறம், அதிமுகவிலிருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வத்திற்கு இப்போது திமுக தான் ஒரே புகலிடமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் கைகோர்த்துள்ள நிலையில், ஓபிஎஸ்-க்கு என்.டி.ஏ கூட்டணியில் இடமில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவும், எடப்பாடிக்கு ஒரு பாடம் புகட்டவும் அவர் திமுகவின் தயவை நாடக்கூடும் என்ற பேச்சுகள் கோட்டை வட்டாரத்தில் உலா வருகின்றன. ஓபிஎஸ்-ன் வருகை தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியைச் சரிக்கட்ட உதவும் என்பது ஆளுங்கட்சியின் கணக்காக இருக்கலாம்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் திமுக இந்த முறை மிகுந்த எச்சரிக்கையுடனும், அதே சமயம் வேகமாகவும் செயல்படுகிறது. தேமுதிகவுடன் திரைமறைவில் ரகசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பேரங்கள் நடந்து வருவதாகத் தெரிகிறது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை இப்போதே வளைப்பதன் மூலம், எதிர்க்கட்சி முகாமில் எந்த ஒரு மாற்று சக்தியும் உருவாகாமல் தடுத்துவிட வேண்டும் என்பதில் திமுக தலைவர்கள் குறியாக உள்ளனர். மற்ற கட்சிகள் சின்னத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, திமுக தனது பலமான கூட்டணியை இறுதி செய்துவிடத் துடிக்கிறது.
இந்த அதிரடி மாற்றங்களுக்கு முக்கியக் காரணம், அதிமுகவின் மீள் எழுச்சிதான். ஒரு கட்டத்தில் அதிமுக வலுவிழந்துவிட்டதாக நினைத்த திமுகவிற்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி மீண்டும் ஒரு மெகா கூட்டணியைக் கட்டமைத்திருப்பது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதிமுக-பாஜக-அமமுக-பாமக என ஒரு பலமான வாக்கு வங்கி திரண்டு நிற்பது, திமுகவின் வெற்றி வாய்ப்பைத் தடுமாறச் செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இப்போதிருக்கும் கூட்டணியைத் தக்கவைப்பதோடு நில்லாமல், அதை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், திமுக தனது வியூகத்தை மாற்றிக் கொண்டுள்ளது. “விஜய்யை அப்புறம் பார்த்துக்கிடலாம், இப்போதைக்கு எடப்பாடி தான் டார்கெட்” என்ற ஒற்றை இலக்கை நோக்கி திமுகவின் படை நகர்கிறது. ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை உருவாகும் முன்பே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறவிடாமல் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என ‘சூரியன்’ கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் உடன்பிறப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுறுசுறுப்பாகியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2026 தேர்தல் என்பது வெறும் இரு முனை போட்டியாக இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது. ஒருபுறம் அமித்ஷாவின் சாணக்கியத்தனமான ஒருங்கிணைப்பில் அதிமுக கூட்டணி, மறுபுறம் ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் போன்றவர்களை வளைக்கத் துடிக்கும் திமுகவின் எதிர் வியூகம் என தமிழக அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், பாரம்பரிய கட்சிகள் தங்களின் பழைய பகைமைகளை மறந்து புதிய கணக்குகளைப் போடுவது வரும் நாட்களில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
