அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க புதிய விதிகள்.. தமிழக அரசு அறிவிப்பு

By Keerthana

Published:

சென்னை: தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் புதிதாக “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” ஐ அறிவித்துள்ளது. இந்த விதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும, அடுக்குமாடியின் பொதுவான பகுதிகள் மற்றும் அவற்றின் வசதிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி முதல் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம் 2022 அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தின் அடிப்படையில் “தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள், 2024” விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிகளின் படி, பழைய மற்றும் சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடங்களை உரிமையாளர்கள் இடித்து புனரமைக்க முடியும்.

“தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை 2024” விதிகளின்படி, அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடு குடியிருப்பு தொடர்பான பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதை பதிவு செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து சங்கத்திற்கான துணைவிதிகளை உருவாக்க வேண்டும். ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும்.

நிர்வாக குழு சங்கத்தின் சொத்துக்களின் ஒட்டுமொத்த மேலாண்மை, பொதுவான பகுதிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொதுவான பகுதிகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.

ஒரு சொத்தில் பல குடியிருப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம்.

அங்கு ஒவ்வொரு சங்கத்தின் தலைவர் மற்றும் பெருளாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும்.

கூட்டமைப்பின் தலைவர் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார்.

பழைய கட்டிடங்களை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்றால், நிர்வாக குழு சுயமாகவோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் நான்கில் ஒரு பகுதியினரின் கோரிக்கையின் பேரில் ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

ஆனால், குடியிருப்பின் உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, திட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் சம்மதத்துடன் இந்த தகவலை சம்பந்தப்பட்ட நகர்புற திட்டமிடல் அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட திட்டமிடல் ஆணையத்தின் முன் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.

கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக திட்டமிடல் அதிகாரிகள் சான்றளித்தால், விரிவான மறுவடிவமைப்பு அறிக்கையைத் தயாரிக்க சங்கங்கள் அனுமதிக்கப்படும்.

மறுவடிவமைப்புத் திட்டம் முடிந்ததும், கட்டிடத்தை காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

யாரேனும் ஒருவர் வெளியேற மறுத்தால், அந்த நபரை போலீஸ் பாதுகாப்புடன் சங்கம் வெளியேற்றலாம்.

இந்த விதிகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்க வேண்டும்.

இந்த விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறையின் அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள்.

துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக செயல்படுவார்கள்.