தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஓர் அணியில் திரள்வோம்” என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், அனைத்து நிர்வாகிகளும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையில் தீவிரமாக உள்ளனர். வீடு வீடாக சென்று தி.மு.க. உறுப்பினர் படிவத்தை நிரப்ப செய்து, தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.
ஏற்கனவே தி.மு.க.வுக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நேற்று வரை 77 லட்சம் உறுப்பினர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை 3 கோடி என அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் மொத்தமே கடந்த 2024 ஆம் ஆண்டின் தேர்தல் ஆணைய கணக்கின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் மூன்று கோடி தி.மு.க. உறுப்பினர்களே உள்ளனர் என்ற நிலையில், கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் வாக்குகள் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தால் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது, “எதற்காக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளைச் சேர்க்க வேண்டும்? தி.மு.க. தனது வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் 234 தொகுதிகளிலும் நிறுத்தி, இந்த மூன்று கோடி உறுப்பினர்களும் வாக்களித்தால் 200 தொகுதிகளைத் தாராளமாக வென்று விடலாமே?” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உறுப்பினர் சேர்க்கை என்பதே கட்சியின் தலைமையை ஏமாற்ற நிர்வாகிகள் செய்யும் நடவடிக்கைதான் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு கோடிக்கு அதிகமாக உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் உறுப்பினர்கள் இருப்பார்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட பத்து கோடி வரை வரும். ஆனால், தமிழகத்தில் வாக்காளர்கள் ஆறு கோடி தான் இருக்கிறார்கள். “ஆறு கோடி வாக்காளர்கள் இருக்கும்போது, கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எப்படி 10 கோடியாக வரும்? இதில் இருந்தே தெரியவில்லையா, கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் போலியான உறுப்பினர் எண்ணிக்கையை தருகிறார்கள் என்று?” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
“உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நடவடிக்கையை தவிர்த்து, மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளோம், இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களுக்கு எடுத்து கூறினாலே வாக்குகள் தானாக வரும். அதை செய்யாமல், உறுப்பினர் சேர்க்கை என்ற நடவடிக்கையை ஒரு புதிய கட்சியை போல் தி.மு.க. செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.”
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
