தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கிய பிறகு, ஆளுங்கட்சியான திமுக எதிர்வினை ஆற்றும் விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. “விஜய்யை திமுக சீண்டாமல் அமைதியாக விட்டிருந்தால், ஒருவேளை அவர் தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியலை விட்டு விலகியிருக்கக்கூடும்; ஆனால் அவரை தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் திமுகவே அவருக்கு தேவையான அரசியல் அங்கீகாரத்தை வழங்குகிறது” என்பதுதான் தற்போதைய பிரதான வாதம். தரையில் இருக்கும் பந்தை எவ்வளவு வேகமாக அடிக்கிறோமோ, அவ்வளவு உயரத்திற்கு அது எழும்பும் என்பதை போல, திமுகவின் சீண்டல்கள் விஜய்யின் பிம்பத்தை மென்மேலும் வலுவாக்கி வருகின்றன.
இந்தச் சூழல் 1970-களில் எம்ஜிஆர் – திமுக இடையே நிலவிய மோதலை நினைவுபடுத்துவதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அன்று திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது, அக்கட்சி அவரை தீவிரமாக தாக்கியது. ஆனால் அந்த தாக்குதல்களே மக்கள் மத்தியில் எம்ஜிஆர் மீதான அனுதாபத்தையும் ஈர்ப்பையும் அதிகரித்து, அவரை அரியணையில் ஏற்றியது. இன்று விஜய்யை ‘வாக்குரிமை இல்லாத சிறுவர்களின் தலைவர்’ என்றும், ‘திட்டமிட்ட கொள்கை இல்லாதவர்’ என்றும் திமுக விமர்சிப்பது, அதே வரலாற்று தவறை மீண்டும் செய்வதாக தெரிகிறது. 75 வருட கால பாரம்பரியமும், பல லட்சம் தொண்டர்களையும் கொண்ட ஒரு கட்சி, அரசியலில் காலடி எடுத்து வைத்த ஒரு நடிகரை கண்டு இவ்வளவு பதற்றமடைவது ஏன் என்ற கேள்வி நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்கு வங்கியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கருத்துக்கணிப்புகள் விஜய்யை முதலமைச்சர் ரேஸில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது திமுகவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் பலம் அதன் கட்டமைப்பு மற்றும் திராவிட சித்தாந்தம் என்றாலும், விஜய்யின் வருகை அந்த சித்தாந்தப் போரை தனிநபர் செல்வாக்கு என்ற தளத்திற்கு மாற்றியுள்ளது. இது ஒரு கட்சியின் பலத்தை விட, தலைவரின் ஈர்ப்பு என்ற ரீதியில் தேர்தலை நகர்த்துகிறது.
இந்த தேர்தலில் மோதல் என்பது ‘ஸ்டாலினா? விஜய்யா?’ என்ற தளத்தில் இருக்கும்போது, மு.க.ஸ்டாலினின் அனுபவம் மற்றும் தற்போதைய நிர்வாகத் திறன் அவருக்கு எளிதான வெற்றியை தேடித்தர வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் ஸ்டாலின் இன்னும் ஒரு செல்வாக்கு மிக்க ஆளுமையாகவே நீடிக்கிறார். ஆனால், எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு ‘உதயநிதியா? விஜய்யா?’ என்ற கேள்வி வரும்போதுதான் திமுகவிற்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது. இருவரும் ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள், சினிமா பின்னணி கொண்டவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கக் கூடியவர்கள் என்பதால், உதயநிதிக்கு விஜய் ஒரு மிகப்பரிய சவாலாக உருவெடுத்துள்ளார்.
விஜய்யின் வளர்ச்சிக்கு திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் அதீத விமர்சனங்களே உரமிடுவதாக தெரிகிறது. “எதிரியை புறக்கணிப்பதே சிறந்த அரசியல்” என்பதை தவிர்த்துவிட்டு, அவரை தேடி சென்று தாக்குவது விஜய்யை ஒரு பலமான மாற்று சக்தியாக மக்கள் மனதில் பதிய வைக்கிறது. விஜய்யால் திமுக மற்றும் அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை பிரிக்க முடியாது என்று சொல்லப்பட்டாலும், ஆட்சி அமைப்பதற்கான அந்த ‘விளிம்பு நிலை’ வாக்குகளை அவர் கைப்பற்றினால், அது திராவிட கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பறித்துவிடும்.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது ஒரு தலைமுறை மாற்றத்திற்கான போராக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி திமுக தனது அடுத்தகட்ட அரசியலை நகர்த்த முயலும் வேளையில், விஜய் அந்த இடத்திற்கு ஒரு நேரடி போட்டியாளராக வந்துள்ளார். “விஜய்யை வளர விடுவது யார்?” என்ற கேள்விக்கு திமுகவின் தற்போதைய அணுகுமுறையே பதிலாக இருக்கிறது. இந்த அரசியல் சதுரங்கத்தில் திமுகவின் வியூகம் விஜய்யை தனிமைப்படுத்துமா அல்லது அவரை ஒரு மாபெரும் தலைவராக உருமாற்றுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
