தமிழக அரசியல் களம் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான மோதலால் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த திடமான கூட்டணியில், தற்போது விரிசல் விழ தொடங்கியுள்ளதை டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மாணிக்கம் தாக்கூர் போன்ற தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையை தீவிரமாக முன்வைத்து வருவது, திமுக தலைமைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் இந்த உரசலை வெளிப்படையாக விவாதிக்காவிட்டாலும், திரைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம், திமுக கூட்டணியில் நிலவும் கசப்புணர்வை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் திமுக கூட்டணியை முறித்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களாக சில முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திமுகவின் தீவிரமான சனாதன மற்றும் இந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு வடமாநிலங்களில் காங்கிரஸின் வெற்றியை பாதிக்கிறது என்பது அவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், திமுக வெளிப்படையாக ‘இந்தி திணிப்பை’ எதிர்ப்பதாக கூறினாலும், அவர்களின் அணுகுமுறை இந்தி மொழிக்கு எதிரானதாக சித்தரிக்கப்படுவதால், வடமாநிலங்களில் உள்ள இந்தி பேசும் மக்கள் காங்கிரஸை ஒரு எதிர் தரப்பாக பார்க்க தொடங்கியுள்ளனர். இது தேசிய அளவில் காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாக மாநில நிர்வாகிகள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் மேலிடம் தற்போது திமுகவின் நகர்வுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது. திமுக ஒரு ‘அதிகாரத்தை மையமாக கொண்ட கட்சி’ என்பதால், தேசிய அளவில் அதிகாரத்தை பெறுவதற்காக அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாஜகவை நோக்கி நகரக்கூடும் என்ற அச்சம் காங்கிரஸிடம் உள்ளது. குறிப்பாக 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் திமுக முழுமையான வெற்றியை பெற்றும், தேசிய அளவில் அதிகாரத்தை ருசிக்க முடியாமல் போன ஏக்கம் அவர்களுக்கு உள்ளது. இதனால், 2029-ல் பாஜகவுடன் கைகோர்த்து டெல்லியில் அதிகாரத்தை பெற ஸ்டாலின் தலைமையிலான திமுக முயலலாம் என்று காங்கிரஸ் சந்தேகிக்கிறது. எனவேதான், திமுகவை இந்துக்களுக்கும், வடமாநில மக்களுக்கும் எதிரான கட்சியாக எஸ்டாப்ளிஷ் செய்வதன் மூலம், பாஜகவிற்கும் திமுகவிற்கும் இடையே ஒரு தடையை உருவாக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.
மறுபுறம், திமுகவுடனான கூட்டணியை முறித்து கொண்டு நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தீவிரமாக யோசித்து வருகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்புகள் விஜய்க்கு தமிழகத்தில் கணிசமான ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்துவது காங்கிரஸுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. தவெக-வுடன் இணைவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் மீண்டும் வலுப்படுத்த முடியும் என்றும், திமுகவின் மேலாதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்றும் நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது திமுக அரசுக்கு எதிராக நிலவும் ஒருவிதமான அதிருப்தி நிலை காங்கிரஸின் வளர்ச்சியையும் பாதிப்பதாக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். திமுகவின் செயல்பாடுகளால் வரும் அவமானங்களை சுமக்க விரும்பாத பல இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணியை விட்டு வெளியேற துடிக்கின்றனர். மூத்த தலைவர்களில் ஒரு சிலர் மட்டுமே திமுகவுடன் இணக்கமாக இருக்க விரும்புவதாகவும், அவர்கள் ராகுல் காந்தியிடம் தவறான பிம்பத்தை கட்டமைப்பதாகவும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கடிதம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலையும், திமுகவுடனான உறவில் ஏற்பட்டுள்ள கசப்பையும் மிக தெளிவாக காட்டுகிறது. 2026 தேர்தலில் திமுகவை சார்ந்து இருக்காமல், தனித்துவமான அரசியல் பாதையை வகுக்க வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் தற்போதைய விருப்பமாக உள்ளது.
முடிவாக, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘ஷிப்ட்’ ஏற்படுவதற்கான காலம் கனிந்து வருகிறது. திமுகவின் தேசிய ஆம்பீஷன் ஒருபுறமும், காங்கிரஸின் இருத்தலுக்கான போராட்டம் மறுபுறமும் இருக்க, விஜய் எனும் புதிய சக்தி இந்த சமன்பாட்டை மாற்றியமைக்க காத்திருக்கிறது. டெல்லியில் இன்று எடுக்கப்படும் முடிவுகள், தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த அரசியல் கூட்டணிகளை உடைக்கக்கூடும். திமுக பாஜகவை நோக்கி நகருமா அல்லது காங்கிரஸ் விஜய்யுடன் கைகோர்க்குமா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழக அரசியல் களத்தில் அடுத்து வரும் மாதங்கள் அதிரடியான திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
