நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பயண திட்டங்களில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், குழப்பத்தை ஏற்படுத்துவதாக தோன்றினாலும், அவை ஆழ்ந்த அரசியல் வியூகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றன. இந்த பயணங்கள் மூலம் தி.மு.க.வை நேரடியாக எதிர்கொள்வது, அ.தி.மு.க.வை விமர்சிக்காமல் இருப்பது போன்ற வியூகங்கள் மூலம் விஜய் தன்னை ஒரு வலுவான மாற்று சக்தியாக நிலைநிறுத்த முயல்கிறார்.
விஜய் தனது அரசியல் பயணங்களில், ஆளுங்கட்சியான தி.மு.க.-வை மட்டுமே குறிவைத்து தாக்கி பேசி வருகிறார். ஆளுங்கட்சியில் கூட அமைச்சர்களையோ, எம்.எல்.ஏக்களையோ, எம்பிக்களையோ அவர் விமர்சனம் செய்வதில்லை, நேராக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை குறி வைத்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க.வின் கோட்டைகளாக கருதப்படும் இடங்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் தனது கூட்டங்களை நடத்துவதன் மூலம், அவர் தனது கட்சியின் பலத்தையும், தி.மு.க.விற்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த நிகழ்வுகளை விமர்சிக்காமல் இருப்பதன் மூலம், அவர் அந்த ஆட்சியில் அதிருப்தியுற்ற மக்களின் வாக்குகளையும் ஈர்க்க முற்படுகிறார். இந்த யுக்தி, அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், தனது பக்கம் திரள உதவும் என்று நம்புகிறார்.
விஜயின் கூட்டங்களுக்கு எதிர்பாராத அளவில் மக்கள் திரள்வதால், அதை ஒரு அரசியல் சக்தியாக மாற்றும் வகையில் புதிய திட்டங்களை தவெகவினர் வகுக்கின்றனர். விஜயின் இந்த திடீர் அரசியல் பிரவேசத்துக்கு, தி.மு.க.வினர் சில இடங்களில் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தினாலும், தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்கின்றனர். விஜய்யின் பிரசாரத்தை நேரடியாக தடுத்து நிறுத்தினால், அது அவருக்கு மேலும் மக்கள் ஆதரவை பெற்றுத்தரும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே, மறைமுகமாக சமூக வலைத்தளங்கள் மூலம் விஜய்க்கு எதிராக எதிர்மறை பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்யின் இந்த அரசியல் வியூகம் பலனளிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல்களும், மக்கள் மத்தியில் உள்ள தி.மு.க. எதிர்ப்பு மனநிலையும், த.வெ.க.வுக்குச் சாதகமாக உள்ளன. எனினும், நடிகர் என்ற பிம்பத்தைத் தாண்டி, ஒரு அரசியல் தலைவராக அவர் மக்களை முழுமையாக ஈர்க்க வேண்டும்.
அவர் மக்கள் நலத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் எதிர்காலச் செயல்திட்டங்கள் குறித்து இன்னும் ஆழமாகப் பேச வேண்டும். அதே நேரத்தில், அவசரமாகச் செய்யும் அறிவிப்புகள், பயணத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை கட்சியின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடக்கூடும்.
வரும் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில், விஜய் தனது அரசியல் பயணத்தை எவ்வாறுத் தொடர்கிறார் என்பது, தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
