2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தி.மு.க.வின் தற்போதைய களநிலை, அதன் பலவீனங்கள், மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சி ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர்கள் முக்கியக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க.வின் வெற்றிக்கு, ஒரு முன்னணி நிறுவனம் இரவு பகலாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மேற்கொண்ட ரகசிய கருத்துக்கணிப்பு, தி.மு.க. தலைமைக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 106 தொகுதிகள் தி.மு.க.வுக்கு “பலவீனமான தொகுதிகள்” என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அந்த அறிக்கை திட்டவட்டமாக தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் உயர்மட்டத் தலைமை உடனடியாக செயல்பட தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு எம்.பி.க்கும் மூன்று தொகுதிகளின் பொறுப்பை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்த 106 பலவீனமான தொகுதிகளில், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி, தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் களத்தில், தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைவதற்கு முக்கிய காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் நிலவும் சுணக்கம் மற்றும் தயக்கம் காரணமாக, தேர்தல் களம் மந்தமாக உள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட விஜய், தனது கட்சியின் மூலம் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரசிகர் மன்றங்களை வலுவான வாக்கு வங்கியாக மாற்றுவதிலும், இளைஞர்களின் ஆதரவை திரட்டுவதிலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் சுற்றுப்பயணங்கள், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை கண்டன. இது, தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியில் ஒரு பகுதியை விஜய்யின் பக்கம் ஈர்த்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ‘தி.மு.க.வின் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன’ என்று அவர்கள் இந்த நிலையை வர்ணிக்கின்றனர்.
வரவிருக்கும் தேர்தல், ஒரு கிரிக்கெட் போட்டி போல விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி வலுப்பெற தயங்கி வரும் நிலையில், தி.மு.க.வும் விஜய்யும் நேரடி போட்டியில் இறங்கியுள்ளனர். தி.மு.க. தனது பலவீனமான தொகுதிகளை மீட்க போராடும் அதே வேளையில், விஜய் தனது செல்வாக்கை பயன்படுத்தி இளைஞர்களின் வாக்குகளை பெற முயற்சிப்பார். தேர்தல் களத்தின் இந்த ஆட்டத்தின் இறுதியில், யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
