ஒரு பக்கம் பாஜகவை அதிமுக பழிவாங்கிவிட்டது.. இன்னொரு பக்கம் காங்கிரஸை திமுக பழிவாங்கிவிட்டது.. ஆக மொத்தம் திராவிட கட்சிகளிடம் ஏமாந்தது தேசிய கட்சிகள்.. அதிமுகவும் திமுகவும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேலை செய்ய மாட்டாங்க.. இந்த பக்கம் 27ம், அந்த பக்கம் 28ம் தோற்பது உறுதி.. அரசியல் விமர்சகர்கள்..

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் தற்போதைய சூழலை, தேசிய கட்சிகளுக்கு எதிராக திராவிடக் கட்சிகள் விரித்துள்ள ஒரு நுணுக்கமான அரசியல் வியூகமாகவே விமர்சகர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, பாஜகவை அதிமுகவும்,…

bjp congress

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் தற்போதைய சூழலை, தேசிய கட்சிகளுக்கு எதிராக திராவிடக் கட்சிகள் விரித்துள்ள ஒரு நுணுக்கமான அரசியல் வியூகமாகவே விமர்சகர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, பாஜகவை அதிமுகவும், காங்கிரஸை திமுகவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, இறுதியில் அந்த கட்சிகளை தேர்தல் களத்தில் பலவீனப்படுத்திவிட்டன என்ற பேச்சு பலமாக எழுந்துள்ளது. டெல்லியில் அதிகாரம் செலுத்தும் தேசிய கட்சிகள், தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் போதெல்லாம், திராவிட கட்சிகள் தங்களின் ராஜதந்திரத்தால் அவர்களை வெறும் ‘ஜூனியர் பார்ட்னர்களாக’ மாற்றிவிடுவதை மீண்டும் பார்க்க முடிகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நீண்ட இழுபறிக்குப் பிறகு பாஜகவுக்கு வெறும் 27 இடங்களை மட்டுமே ஒதுக்கி அக்கட்சியை ஒரு சிறிய வட்டத்திற்குள் சுருக்கிவிட்டார். பாஜக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துவிட்டதாக கூறி 40 முதல் 50 இடங்களை கேட்ட நிலையில், வெறும் 27 இடங்களை மட்டும் கொடுத்து கூட்டணி தர்மம் என்ற பெயரில் அவர்களை அதிமுக பழிவாங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் பாஜகவின் வளர்ச்சியை அதிமுக தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், அக்கட்சி தமிழகத்தில் தனியாக செயல்பட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 27 இடங்களை பெற்றுள்ள பாஜக, இதில் தி.நகர், துறைமுகம் போன்ற செல்வாக்குள்ள தொகுதிகளை கோட்டையும் விட்டுவிட்டது.

மறுபுறம், திமுகவின் நிலைப்பாடும் காங்கிரஸிற்கு சாதகமாக இல்லை. நீண்ட கால கூட்டாளியான காங்கிரஸிற்கு 2021-ல் 25 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இம்முறை பெரும் போராட்டத்திற்கு பிறகு 28 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் 40 இடங்களுக்கு மேல் எதிர்பார்த்த நிலையில், தாலுகா அளவிலான கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூடத் தேசிய கட்சியான காங்கிரஸிற்கு திமுக வழங்கவில்லை. ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள் என எதற்கும் பணியாத முதலமைச்சர் ஸ்டாலின், இறுதியில் காங்கிரஸை 28 இடங்களுக்குள் முடக்கிவிட்டார். இது காங்கிரஸின் தன்மானத்தை பாதித்திருந்தாலும், வேறு வழியின்றி அக்கட்சி திமுகவின் நிழலிலேயே தஞ்சமடைந்துள்ளது.

அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, திராவிட கட்சிகள் தேசிய கட்சிகளை தேர்தல் வேலைக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றன. களத்தில் ஓட்டு சேகரிக்கும் போதும், பூத் கமிட்டி வேலைகளின் போதும் அதிமுகவும் திமுகவும் தங்களின் சொந்த வேட்பாளர்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். பாஜகவின் 27 இடங்களிலும், காங்கிரஸின் 28 இடங்களிலும் அந்தந்த திராவிட கட்சிகளின் தொண்டர்கள் முழு மனதுடன் வேலை செய்வார்களா என்பது சந்தேகமே. இதனால் தேசிய கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தோல்வியை தழுவுவது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் 27-ம், இன்னொரு பக்கம் 28-ம் மண்ணை கவ்வும் என்பதுதான் தற்போதைய அரசியல் நிலவரம்.

தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர துடித்தாலும், திராவிட கட்சிகளின் கோட்டைக்குள் நுழைய முடியாமல் தடுமாறுகின்றன. பாஜக தன்னை ஒரு பிரதான எதிர்க்கட்சியாக காட்டிக் கொள்ள முயன்றாலும், அதிமுகவின் பிடியிலிருந்து அதனால் தப்ப முடியவில்லை. அதேபோல், டெல்லியில் செல்வாக்குள்ள காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவின் தயவின்றி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் உள்ளது. திராவிட கட்சிகள் தங்களுக்குள் ஆயிரம் சண்டைகள் போட்டு கொண்டாலும், தேசியக் கட்சிகளை தமிழகத்திற்குள் வளர விடக்கூடாது என்பதில் மட்டும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தை கடைபிடிப்பது போல தெரிகிறது.

முடிவாக, 2026 தேர்தல் முடிவுகள் வரும்போது தேசிய கட்சிகள் தங்களின் பலவீனத்தை உணரும் ஒரு சூழல் ஏற்படும். திராவிட கட்சிகளிடம் ஏமாந்துவிட்டோம் என்ற உண்மை அப்போதுதான் பாஜகவுக்கும் காங்கிரஸிற்கும் புரியவரும். 160-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள்தான் உண்மையான ஆட்டக்காரர்கள்; 20-30 இடங்களில் போட்டியிடும் தேசிய கட்சிகள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்கள் மட்டுமே. இந்த அரசியல் சதுரங்க வேட்டையில், தேசிய கட்சிகளை பலிகடாவாக்கி திராவிட கட்சிகள் தங்களின் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளும் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன