ஒரு பக்கம், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் திமுகவை எதிர்க்க வலுவில்லாமல் அதிமுக பலவீனமாக இருப்பதை அறிந்த விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர், வித்தியாசமான கூட்டணியை அமைக்க இருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, அதிமுக மற்றும் திமுக என இரண்டு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருக்கின்றன. மக்களுக்கு வேறு தேர்வுக்கான வாய்ப்பு இல்லாததால், தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி உருவாகி, மக்கள் அந்தக் கட்சி நம்பிக்கை வைத்தால், நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், இதுவரை அப்படி ஒரு மக்கள் நம்பிக்கை பெறும் கட்சி தோன்றவில்லை. விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அந்த முயற்சியை எடுத்தாலும், திராவிடக் கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதில் உறுதி இல்லாததால், மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது தான் விஜய் மீது ஓரளவுக்கு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிகிறது. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே திமுகவை கடுமையாக எதிர்ப்பது, அதேபோல் மத்திய அரசுக்கு ஜால்ரா போடாமல் அவ்வப்போது மத்திய அரசையும் கண்டிப்பது என, விஜய்யின் அரசியல் வித்தியாசமாக உள்ளது.
அதேபோல், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், “பத்தோடு பதினொன்று” ஆகி, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சியாக மாறிவிடும். இதே தவறை விஜயகாந்த் செய்ததை நீங்கள் செய்யக்கூடாது என்று பிரசாந்த் கிஷோர், விஜய்க்கு ஆலோசனை கூறியிருப்பதாக தெரிகிறது.
எனவே, தனித்தும் போட்டியிடாமல், திமுக-அதிமுக கூட்டணிகளுடனும் சேராமல், மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சில முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில், 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அமைக்கும் வித்தியாசமான கூட்டணி, நிச்சயம் வெற்றி கூட்டணியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.