தமிழக அரசியலில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியதிலிருந்து, அவரை சுற்றியுள்ள அரசியல் விமர்சனங்களும், கணிப்புகளும் அனல் பறக்கின்றன. குறிப்பாக, ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை மிக மோசமாக சித்திரிக்க தொடங்கியுள்ளனர். சசிகலா எப்படி அரசியலில் நசுக்கப்பட்டாரோ, அதேபோல் விஜய்யையும் நசுக்கிவிடுவார்கள் என்றும், அவர் அரசியலை விட்டே ஓடிவிடுவார் என்றும் ஒரு அச்சத்தை விதைக்கிறார்கள். இது விஜய்யின் அரசியல் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் ஒரு வகையான ‘மனவியல் யுத்தம்’ என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் வீழ்த்தப்பட்டதை காட்டி, புதியவர்களை பயமுறுத்துவது என்பது காலம் காலமாக இங்கே நடந்துவரும் வியாபாரி அரசியல் விமர்சகர்களின் வேலையாகிவிட்டது.
திமுக என்ற அரை நூற்றாண்டு கால பேரியக்கத்தை எதிர்ப்பதே விஜய்க்கு சவாலான காரியம் என்று கூறப்படும் நிலையில், மத்திய ஆளும் கட்சியான பாஜகவை அவரால் ஒருபோதும் சமாளிக்க முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய அரசியலின் ‘சாணக்கியர்’ என்று அழைக்கப்படும் அமித்ஷா, விஜய்யை தனது இடது கையால் கையாண்டுவிடுவார் என்றும், விஜய்யின் அரசியல் நகர்வுகளை மிக எளிதாக முடக்கிவிடுவார் என்றும் கதைகள் பரப்பப்படுகின்றன. ஆனால், அமித்ஷாவின் டெல்லி அரசியலும், தமிழ்நாட்டின் உணர்ச்சிப்பூர்வமான திராவிட அரசியலும் வேறு வேறானவை என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுமைகளை அமித்ஷா டீல் செய்திருந்தாலும், ஒரு புதிய இளைஞர் பட்டாளத்தின் ஆதரவோடு வரும் விஜய்யை அவ்வளவு எளிதாக முடக்கிவிட முடியாது என்பதே எதார்த்தம்.
கூட்டணி அரசியலை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கைகோர்த்தால் அது அவருக்கு பெரிய ஆபத்தாக முடியும் என்று சில விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். திமுகவுடன் நீண்ட கால தோழமையில் இருக்கும் காங்கிரஸ், விஜய்யுடன் இணைந்தால் பாஜகவின் நேரடி பார்வை அவர் மீது விழும் என்றும், விசாரணை அமைப்புகளின் மூலம் விஜய்யை ஓட விடுவார்கள் என்றும் பயமுறுத்துகிறார்கள். ஆனால், விஜய் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் அரசியலுக்கு வரும்போது, அவர் எத்தகைய நெருக்கடிகளையும் முன்கூட்டியே கணித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது தேர்தல் நேரத்து வியூகமே தவிர, அது ஒருவரின் அரசியல் வாழ்வை முடித்துவிடும் காரணி அல்ல.
வியாபாரி அரசியல் விமர்சகர்களின் பார்வையில் விஜய் என்பவர் வெறும் ஒரு திரைப்பட நட்சத்திரமாக மட்டுமே தெரிகிறார். ஆனால், திரைக்குப் பின்னால் அவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விதம், அடிமட்டத் தொண்டர்களுடன் அவர் வைத்திருக்கும் தொடர்பு ஆகியவை ஒரு வலுவான அடித்தளத்தைக் காட்டுகின்றன. சசிகலாவோடு விஜய்யை ஒப்பிடுவது என்பது அடிப்படை அறிவற்ற செயலாகும். சசிகலா ஒரு கட்சியின் அதிகார மையத்தில் இருந்தாரே தவிர, அவரிடம் மக்கள் செல்வாக்கோ அல்லது நேரடி ஓட்டு வங்கியோ இருந்ததில்லை. ஆனால், விஜய் ஒரு தனிப்பெரும் பிம்பமாக, லட்சக்கணக்கான இளைஞர்களின் முகமாக அரசியலுக்குள் நுழைகிறார். இவரை நசுக்குவது என்பது வெறும் ஒரு நபரை நசுக்குவது அல்ல, அவருக்கு பின்னால் இருக்கும் ஒரு தலைமுறையின் நம்பிக்கையை நசுக்குவதற்கு சமம்.
அமித்ஷாவோ அல்லது வேறு யாராவது விஜய்யை மிரட்டவோ அல்லது முடக்கவோ நினைத்தால், அது அவருக்கான மக்கள் ஆதரவை இன்னும் அதிகரிக்கவே செய்யும். தமிழக வரலாறு எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நின்றிருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு தலைவனை அதிகாரம் நசுக்க நினைக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர் மக்கள் மத்தியில் ஒரு நாயகனாக உயருவார். விஜய் தனது அரசியல் பயணத்தில் பயப்படுபவராக இருந்திருந்தால், இவ்வளவு பெரிய திரை உலக உச்சத்தில் இருக்கும்போது தனது நிம்மதியை இழந்து அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். எதற்கும் துணிந்து தான் அவர் களமிறங்கியிருக்கிறார் என்பதை அவரது ஒவ்வொரு பேச்சும், மௌனமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
இறுதியாக, அரசியல் விமர்சகர்கள் சொல்லும் ‘ஓடிவிடுவார்’, ‘நசுக்கப்படுவார்’ போன்ற வார்த்தைகள் விஜய்க்கு புதியவை அல்ல. சினிமா வாழ்க்கையிலேயே அவர் பல தடைகளையும், மிரட்டல்களையும் சந்தித்து தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அரசியலில் ஆரம்பக்கட்ட சோதனைகள் வருவது இயற்கைதான். ஆனால், ஒரு கொள்கை பிடிப்போடும், தெளிவான திட்டத்தோடும் களமிறங்கியிருக்கும் விஜய்யை யாராலும் அவ்வளவு எளிதில் அச்சுறுத்திவிட முடியாது. விமர்சனங்கள் அவரை இன்னும் செதுக்குமே தவிர, ஒருபோதும் சிதைக்காது. காலம் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும், அதுவரை இந்த விமர்சனங்கள் வெறும் சத்தங்களாக மட்டுமே காற்றில் கரையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
