தமிழகத்தில் ஒரு நிமிடத்தில் பட்டா.. பத்திரப்பதிவு செய்தாலே தேடி வரப்போகும் அதிசயம்

தமிழகத்தில் பட்டா வாங்க வேண்டும் என்றால் விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அலைய வேண்டிய நிலை வரும். அத்துடன் வருவாய்த்துறையில் உள்ள விஏஓ, நிலஅளவையர் தாசில்தார் அலுவலங்களில் கையூட்டும் கொடுக்க வேண்டிய நிலை…

Chief Minister MK Stalin has taken steps to issue patta within a minute

தமிழகத்தில் பட்டா வாங்க வேண்டும் என்றால் விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அலைய வேண்டிய நிலை வரும். அத்துடன் வருவாய்த்துறையில் உள்ள விஏஓ, நிலஅளவையர் தாசில்தார் அலுவலங்களில் கையூட்டும் கொடுக்க வேண்டிய நிலை சில சந்தர்ப்பங்களில் வரும். பட்டா வாங்க 7000 வரையிலும் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு எல்லா மாவட்டங்களிலும் இருந்தும் புகார்கள் வந்தது. இதையடுத்து நேரடியாகவே கவனம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின், லஞ்சம் இல்லாமல் பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படியே பத்திரப்பதிவில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் மாற்றம் என்னவென்றால், எந்த அலுவலகத்திற்கும் சென்று காத்திருக்காமல் இணையதளம் மூலமே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் எளிதாக பெற முடிகிறது.

இரண்டாவது மாற்றம் என்னவென்றால், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது வரிசைப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக பட்டா மனுக்கள் 2 வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று நேரடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டிய உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா. மற்றொன்று உட்பிரிவு செய்ய கூடிய பட்டா. உட்பிரிவு இல்லாத பட்டா மாற்றம் மனுக்கள் மீது 16 நாட்களுக்குள் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். உட்பிரிவு செய்ய வேண்டிய பட்டாவிற்கு 30 நாட்கள் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம் . இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம்.. இங்கு தான் லஞ்சம் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. எனவே சிறிய காரணங்களை சொல்லி மனுக்களை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது மாற்றம் என்னவென்றால் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்குவது.. ஒரு சொத்தை பத்திரப்பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் ஒரு சொத்தை பதிவு செய்தவுடன், அதற்கான பட்டா மாற்றம் மனு பத்திரப்பதிவு துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மனுவை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தலைமையிடத்து துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்து பட்டா தருவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். அதன்படியே பட்டா மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் ‘ஒரு நிமிட பட்டா திட்டம்’ எப்படி இருக்கும் என்றால், இனி வருவாய்த்துறைக்கு ஆவணங்கள் அனுப்பப்படாது. உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றத்திற்கு மட்டும் ஒரு நிமிட பட்டா வழங்கப்படும். சொத்தினை விற்பவர்கள் பெயரில் பட்டா இருந்து, அந்த பட்டாவில் உள்ள சொத்து அளவினை முழுமையாக அப்படியே வாங்குபவர்களுக்கு உடனடி பட்டா வழங்கப்படும். அதற்கான பணிகள் சுமார் 90 சதவீதம் தற்போது முடிந்து விட்டது.

சில இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி முறையில் ஒரு நிமிட பட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை முழு அளவில் செயல்படுத்தப்படும்.