துள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரி

By Keerthana

Published:

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலை-அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து உள்ளது. காவேரி சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து நேற்று அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டத் திட்டமாக விமானநிலையம்-விம்கோ நகா், சென்னை சென்டிரல்-பரங்கிமலை வரையில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயங்கி வருகிறது.

சென்னையில் இரண்டாம் கட்டமாக 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையில் 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரையில் 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூா் வரையில் 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில், 3வது வழித்தடத்தி பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரையில் அடையாறு ஆற்றுக்கு அடையில் சுரங்கப்பாதை பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. சுரங்கப்பாதைகள் தோண்டும் பணிக்கு காவேரி மற்றும் அடையாறு என்ற 2 பூமி அழுத்த சமநிலை சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பணியில் ஈடுபட்டன. இதில், காவேரி சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து நேற்று அடையாறு நிலையத்தை வந்தடைந்திருக்கிறது.

இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை, மேற்பகுதி மணல் போன்றவற்றை கடந்து வந்திருக்கிறது.. மேலும், அடையாறு ஆற்றின் சில பகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை உருவாக்கிய காவேரி எந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை பிரச்சனை ஏற்பட்டது. பல கட்ட போராட்டத்திற்கு பின் சீரமைக்கப்பட்டு சுரங்கத்தை வெற்றிகரமாக தோண்டி உள்ளது.

இந்த சுரங்கம் தோண்டும் பணிக்கு 178 நாட்கள் தேவைப்பட்டுளள்து. இதேபோல, ‘அடையாறு’ என்ற 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் தற்போது அடையாறு நிலையத்தில் இருந்து 277 மீட்டர் தொலைவில் இருக்கிறது. நவம்பர் மாத இறுதிக்குள் இந்த எந்திரம் அடையாறு நிலையத்தை வந்தடையும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் உங்களுக்காக...