தமிழக பா.ஜ.க.வுக்குள் தற்போது நிலவி வரும் கோஷ்டிப் பூசல்கள், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதலாக வெடித்துள்ளன. கட்சி கட்டுப்பாட்டை நிலைநாட்டும் பெயரில் நயினார் நாகேந்திரன் அமைத்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களையும், கட்சிக்குள் ‘வார் ரூம்’ என்றழைக்கப்படும் குழுவில் உள்ளவர்களையும் குறிவைத்து துரத்தி வருகிறது. இந்த நடவடிக்கை, கட்சியில் அனல் பறக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
நயினார் நாகேந்திரன் தனது சமீபத்திய நடவடிக்கைகளில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் யாருக்கும் போட்டியிட சீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவும் கவனமாகவும் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதே அவரது முதன்மை இலக்காக தெரிகிறது. கமலாலயம் வட்டாரங்கள் அளிக்கும் தகவலின்படி, இதே வேகம் நீடித்தால், அண்ணாமலைக்குக்கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற பேச்சு நிலவுகிறது.
அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டால், அது பா.ஜ.க.வுக்குள் பெரும் சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. ஆனால், இந்த நிலைமையை சமாளிக்க தயார் என்ற மனநிலைக்கு நயினார் தரப்பு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், நயினார் தரப்பு டெல்லி தலைமையிடம் மறைமுகமாக ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அதாவது, “அண்ணாமலைக்கு சீட் கொடுத்தால், அவர் தலைமையில் முன்னர் பாதிக்கப்பட்ட பல மூத்த தலைவர்களும், அ.தி.மு.க.வின் சில முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் முழு வீச்சில் வேலை பார்க்க மாட்டார்கள். எனவே, அவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று டெல்லிக்கு ஐடியா கொடுத்ததாக செய்தி வெளிவருகிறது.
டெல்லியின் மேலிடத்தின் மனநிலையையும், அக்கட்சியின் தலைமை இந்த மோதல் குறித்து என்ன நினைக்கிறதோ அதை புரிந்துகொண்ட பின்னரே நயினார் நாகேந்திரன் இவ்வளவு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கமலாலயம் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தன்னை சுற்றியுள்ள ஆதரவாளர்கள் வேட்டையாடப்படுவதையும், தனக்கே சீட் மறுக்கப்படலாம் என்ற சூழல் உருவாகி வருவதையும் அறிந்த அண்ணாமலை, நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக டெல்லிக்கு விரைந்துள்ளார்.
டெல்லி தலைமையைச் சந்தித்து இந்த மோதலுக்கான காரணங்கள், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சக்கட்ட மோதல், வரவிருக்கும் தேர்தல் களத்தில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகளுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
