மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விட்டால் சாராயத்தை ஒழித்து காட்டுகிறேன்: அன்புமணி சவால்

By Bala Siva

Published:

மதுவிலக்கு துறையை தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னிடம் ஒப்படைத்தால் நான் மதுவை ஒழித்துக் காட்டுகிறேன் என முதல்வருக்கு சவால் விட்டு பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’இந்த சம்பவம் கண்டிப்பாக தமிழக அரசு தோல்வியாக தான் நான் பார்க்கிறேன். மதுவிலக்கை அமல்படுத்த பலமுறை நாங்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம். கள்ளச்சாராயத்தை தடுக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

காவல்துறை, வருவாய் துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் ஒரு சொட்டு கூட விற்பனை செய்ய முடியாது. தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியதற்கு காரணமே கள்ளச்சாராயத்தை நிறுத்தியதால்தான். ஒரு பக்கம் கள்ளச்சாராயம், மற்றொரு பக்கம் உரிமை பெற்று இருக்கும் சாராயம் என கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மதுவினால் தமிழகத்தில் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மதுவை குடிக்காமல் இருக்க முடியாத சூழலில் மீனவர்கள் விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் வாழும் நிலையை திராவிட கட்சிகள் உருவாக்கி விட்டனர்.

ஒருவர் டாஸ்மாக் மூலம் மது குடிக்க வேண்டும் என்றால் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால் கள்ளச்சாராயம் குடித்தால் ரூ.50 செலவு செய்தாலே போதும். எனவே தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு துறையை அமைச்சரே மதுவை திணிக்கிறார். அரசு இயந்திரம் மூலம் மது திணிக்கப்படுகிறது. சமூக அக்கறை இல்லாத மதுவிலக்கு துறை அமைச்சரை மாற்ற வேண்டும். புதிய தலைமுறை காப்பாற்ற வேண்டும், தமிழகத்தில் சாராயம் இருக்க கூடாது என உண்மையாகவே முதல்வர் எண்ணினால் மதுவிலக்கு துறையை என்னுடைய ஒப்படையுங்கள். நான் கள்ளச்சாராயத்தை ஒழித்துக் காட்டுகிறேன்

குஜராத், பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.