தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி தயாராகி வரும் வேளையில், ஆளுங்கட்சியான தி.மு.க தனது புதிய தேர்தல் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளது. “சொன்னதை செய்வோம்” என்ற முழக்கத்துடன் 2021-ல் அரியணை ஏறிய அறிவாலயம், ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில் தன் பழைய வாக்குறுதிகளின் லட்சணம் என்ன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கல்விக்கடன் ரத்து என்ற ஒற்றை வாக்குறுதியை நம்பி வாக்களித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முடக்கிவிட்டு, ‘டேப்’ வழங்கப்படும் என்று அறிவித்த அரசு, அதையும் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. தொழில்நுட்பக் கல்வி காலத்தின் கட்டாயம் என்று பேசும் அரசு, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் காட்டிய மெத்தனம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் ஓட்டுகளை பெற நெல்லுக்கு ரூ.2,500 மற்றும் கரும்புக்கு ரூ.4,000 ஆதார விலை தருவதாக கூறப்பட்டது. ஆனால், நிஜத்தில் அந்த விலையை எட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ன் மூலம் விவசாய நிலங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கிடங்குகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் பற்றிய அறிவிப்புகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிட்டன.
பெண்களுக்கு வட்டியற்ற கடன், மானியத்துடன் கூடிய தொழில் கடன் என அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலவும் விளம்பரங்களோடு முடங்கிவிட்டன. மிக முக்கியமாக, அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான ‘பழைய ஓய்வூதிய திட்டம்’ என்பது ஒரு கானல் நீராகவே மாறிப்போனது. ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலைமையை காரணம் காட்டி கைவிரித்த அரசின் செயல், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, புதிய இணைப்புக்கான கட்டணத்தை உயர்த்தியது பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய அதிர்ச்சி வைத்தியம். ஆவின் நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகளும், தரமற்ற பால் விநியோகம் குறித்த புகார்களும் ஒரு காலத்தில் பெருமையாக பேசப்பட்ட அந்த நிறுவனத்தின் மதிப்பை சிதைத்துள்ளன.
இப்போது 2026 தேர்தலுக்காக ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்ற புதிய கவர்ச்சிகரமான வாக்குறுதியை தி.மு.க முன்வைக்கிறது. பழைய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத ஒரு அரசு, இந்த மெகா திட்டத்தை எப்படி செயல்படுத்த போகிறது என்ற கேள்வி எழுகிறது. இது மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டமா அல்லது தேர்தல் நேரத்தில் மக்களை கவரும் ஒரு தற்காலிகமான உத்தியா என்பதை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும்.
மொத்தத்தில், கடந்தகால புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைகள் என்பது அழகான வார்த்தைகளால் பின்னப்பட்ட ஒரு மாயவலை என்பது மட்டும் தெளிவாகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
