தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் வகுத்துள்ள “30 நாள் மாஸ்டர் பிளான்” அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கியுள்ள இந்த வியூகத்தின்படி, அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தல் களத்தை முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே நிலவும் சிறு சிறு சலசலப்புகளை சரிசெய்து, வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி, “ஒரே இலக்கு” என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் வலுவாக பதிய வைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
வாக்குச்சாவடி தோறும் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் வலுவான கட்டமைப்பை முழுமையாக முடுக்கிவிடுவதன் மூலம், களப்பணிகளை தீவிரப்படுத்த அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் தி.மு.க அரசின் மீதான விமர்சனங்களை ஆக்ரோஷமாக முன்வைத்து, எதிர்மறையான பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு சமூக ஊடகங்கள் முழுவதிலும் தே.ஜ கூட்டணியின் முழக்கங்கள் மட்டுமே எதிரொலிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் டெல்லி மேலிடம் நம்புகிறது. இந்த டிஜிட்டல் போர்முறை தி.மு.க-வின் பிரசார வியூகங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்னும் மூன்று முறை பிரசாரம் செய்யவும், பிரம்மாண்டமான ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அவருடன் இணைந்து அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரிசையாக பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளனர். இந்த தொடர் பிரசாரங்களின் வாயிலாக தி.மு.கவுக்கு எதிரான ஒரு அலையை உருவாக்கி, அவர்களை தற்காப்பு நிலைக்கு தள்ளுவதே பா.ஜ.கவின் செயல்திட்டம். வாக்குப்பதிவுக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே தி.மு.க தங்களை தற்காத்து கொள்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினால், அவர்களால் எதிர்க்கட்சிகளை தாக்க நேரம் இருக்காது என்பது அமித்ஷாவின் கணக்காக உள்ளது.
பா.ஜ.க நிர்வாகிகள் தரப்பில் இனிவரும் நாட்களில் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். அமித்ஷாவின் இந்த 30 நாள் பிளான் தமிழகத்தையே தே.ஜ கூட்டணிக்கு ஆதரவாக புரட்டிப்போடும் என்று அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தி.மு.கவின் பலமான கூட்டணி கட்டமைப்பு, அவர்களுக்கு கிடைக்கும் அதிகார வர்க்கத்தின் ஆதரவு மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பிரிக்கப்போகும் வாக்குகள் ஆகியவை தே.ஜ கூட்டணியின் வெற்றி வாய்ப்பை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
ஒட்டுமொத்தத்தில், இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சுவாரஸ்யமானதாகவும் பல முனை போட்டிகள் நிறைந்ததாகவும் மாறியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், மக்களின் இறுதி தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைய போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் அதிரடி திட்டங்கள் தி.மு.கவின் கோட்டையை தகர்க்குமா அல்லது ஸ்டாலின் தனது கூட்டணி பலத்தால் அதனை முறியடிப்பாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும். தமிழகத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றக்கூடிய ஒரு முக்கிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
