தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனல் பறக்க தயாராகி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் நிலவும் தற்போதைய சூழல் “கூட்டணி இருக்கிறது, ஆனால் இல்லை” என்ற வினோதமான நிலையை எட்டியுள்ளது. பொதுவாக தேர்தல் காலங்களில் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்துவதும், ஒருவருக்கொருவர் வாக்கு சேகரிப்பதும் வழக்கம். ஆனால், இந்த முறை திமுகவின் தோழமை கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளின் செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்ற செய்தி, திமுக கூட்டணியின் ஒற்றுமை சிதைந்து வருகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்களின் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் பிற தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின்றன. கமல்ஹாசன் பிரச்சாரம் திட்டமே போடவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு கூட்டணியின் அடிப்படை தர்மத்திற்கே எதிரானது என விமர்சிக்கப்படுகிறது.
தங்களின் சொந்த பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த தலைவர்கள், திமுகவின் நிழலில் இருந்து வெளிவர விரும்புவதையே இது காட்டுகிறது. கடந்த காலங்களில் திமுகவின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுழன்று சுழன்று வேலை செய்த இந்த தலைவர்கள், இப்போது தங்களின் எல்லையை சுருக்கிக்கொண்டது ஆளுங்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலைக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் தொகுதி பங்கீட்டில் நிலவும் அதிருப்திதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். “உழைப்பு எங்களுடையது, அதிகாரம் உங்களுடையதா?” என்ற கேள்வி தோழமை கட்சிகளிடையே உரக்க ஒலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, விசிக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் தங்களின் தனித்துவமான அடையாளத்தை நிலைநாட்ட போராடி வருகின்றன. திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய மறுப்பது அல்லது தயக்கம் காட்டுவது என்பது, மறைமுகமாக தங்களின் பலத்தை ஆளுங்கட்சிக்கு உணர்த்தும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. இது வெறும் தொகுதி உடன்பாடு சார்ந்த கூட்டணிதானே தவிர, கொள்கை ரீதியான அல்லது மனப்பூர்வமான கூட்டணி இல்லை என்பதை தற்போதைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தேர்தல் நெருங்கும் வேளையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி போன்ற தேசிய தலைவர்களின் வருகை இல்லாதது மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் இந்த தனித்த போக்கு, வாக்காளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். “இதுக்கு பெயர் கூட்டணியா?” என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.
ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் “200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம்” என்று முழங்கினாலும், கள யதார்த்தத்தில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு குறைந்து வருவது திமுகவிற்கு ஒரு சவாலான சூழலையே உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த விரிசலை திமுக தலைமை சரி செய்யுமா அல்லது இந்த ’இருக்கு ஆனா இல்லை’ என்ற பாணி கூட்டணி தானா? என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
