பிகார் தேர்தல் முடிவால் டிரெண்ட் மாறிவிட்டதா? விஜய்யை மறந்து மக்கள் என்.டி.ஏ கூட்டணி பக்கம் சாய்கிறார்களா? திமுகவை பலமுறை தோற்கடித்த கட்சி அதிமுக.. ஆனால் விஜய்யால் திமுகவை வெல்ல முடியுமா? மக்களின் சந்தேகம் அதிமுக கூட்டணிக்கு சாதகமா? விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணியில் இணைவது தானா?

சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் ஓர் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் எதிரொலிக்குமா, குறிப்பாக நடிகர் விஜய்யின் ‘தமிழர் வெற்றி கழகம்’…

vijay mks eps

சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் ஓர் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் எதிரொலிக்குமா, குறிப்பாக நடிகர் விஜய்யின் ‘தமிழர் வெற்றி கழகம்’ மீதான மக்கள் பார்வை மாறுமா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பலமான ஆட்சியெதிர்ப்பு அலை வீசும் நிலையில், அந்த எதிர்ப்பு அலையை முழுமையாக அறுவடை செய்து விஜய்யால் வெற்றி பெற முடியுமா? பிகார் மாதிரி ஒரு வலிமையான கூட்டணி இருந்தால் தானே வெற்றி கிடைக்கும் என்ற எண்ண ஓட்டங்கள் மக்கள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை, மற்றும் அமித்ஷாவின் வலிமையான கூட்டணி வியூகம். தேசிய அளவில் பா.ஜ.க. தொடர்ந்து வலுவான வெற்றிகளை பெறுவது, தமிழகத்தில் உள்ள மக்கள் மத்தியில் என்.டி.ஏ. கூட்டணி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. தி.மு.க.வுக்கு எதிரான மாநில அளவிலான அதிருப்தி வாக்குகளை, ஒரு வலுவான கூட்டணியே அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவாகிறது.

ஒரு மாநில கட்சி தனித்து நின்று, வலிமையான மற்றும் ஆளும் கூட்டணியை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்பதை பீகார் முடிவுகள் உணர்த்துகின்றன. இது, விஜய்யின் த.வெ.க.வுக்கு ஓர் ஆரம்பகால எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. விஜய்யை நோக்கி இருந்த ஆட்சி மாற்றம் வேண்டும் என்பவர்களின் கவனம், தேர்தல் நெருங்க நெருங்க, எங்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கம், அதாவது அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது என்ற அரசியல் கணிப்புகள் எழுந்துள்ளன. மக்கள் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியின் பக்கம் சாய்வது இயல்பு.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை வீழ்த்தும் வலிமை வரலாற்று ரீதியாக அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது, அதனைப் பலமுறை அதாவது 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2016 என 7 முறை தோற்கடித்த வரலாற்றை அ.தி.மு.க. மட்டுமே கொண்டுள்ளது. தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை திராவிட மாற்று அணியாக அ.தி.மு.க. மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்ற பிம்பம் இன்னும் வலுவாக உள்ளது.

இந்த வரலாற்று சந்தேகம், அதாவது, “அ.தி.மு.க.வால் மட்டுமே தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியுமா? விஜய்யால் முடியுமா?” என்ற மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகம், இயற்கையாகவே அ.தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமையும். மக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கு வீணாகிவிட கூடாது என்று தான் எப்போதுமே விரும்புவார்கள்.

த.வெ.க.வின் தலைவர் விஜய் திரையில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கலாம். ஆனால், அவர் அரசியலில் அனுபவம் இல்லாதவர். அதுமட்டுமின்றி ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் அக்கட்சியில் இல்லை. விஜய் தனித்து போட்டியிட்டால், அவர் தி.மு.க.வை வெல்வதற்கு கடினமாக இருக்கும். மாறாக, அவர் திராவிட கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ள இளைஞர்கள் மற்றும் நடுநிலைவாதிகளின் வாக்குகளை பிரிப்பார். இந்த வாக்குகள் பிரிவது, தி.மு.க.வின் வெற்றியை எளிதாக்கலாம் என்ற அச்சம் அ.தி.மு.க. மற்றும் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

அ.தி.மு.க.வுக்கு உள்ள வேட்பாளர் பலம், பூத் கமிட்டி அமைப்பு பலம், மற்றும் நீண்டகால அரசியல் அனுபவம், இரட்டை இலை சின்னம் போன்றவை விஜய்க்கு இல்லை. ஒரு புதிய கட்சியால் இந்த குறுகிய காலத்தில் தி.மு.க.வின் வேரூன்றிய கட்டமைப்பை உடைக்க முடியுமா என்ற கேள்வி எழுவது நியாயமானது. விஜய்யின் வெற்றி வாய்ப்பு குறித்த மக்களின் சந்தேகம், எந்த மாற்றமும் இல்லாமல், அ.தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக மாறி, தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒருங்கிணைக்க வாய்ப்புள்ளது.

விஜய் தனது கட்சியை ஓர் அசைக்க முடியாத சக்தியாக நிரூபிக்க, முதல் தேர்தலிலேயே கணிசமான வெற்றிகளை பெற வேண்டிய அழுத்தம் உள்ளது. தனித்து போட்டியிட்டு சொற்ப இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால், அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, விஜய்க்கு உள்ள மிகவும் நடைமுறை சாத்தியமான ஒரே ஆப்ஷன், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுதான்.

இந்த முடிவு, த.வெ.க.வுக்கு தேர்தலில் எளிதாக அங்கீகாரம் கிடைக்கும் இடங்களை பெற்றுத் தருவதோடு, அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பையும், பா.ஜ.க.வின் தேசிய பலத்தையும் பயன்படுத்தி கொள்ள உதவும். அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியுடன், விஜய்யின் ரசிகர் மற்றும் இளைஞர் வாக்குகளையும் ஒருங்கிணைத்தால், தி.மு.க.வை வீழ்த்தும் மிக பலமான சக்தியாக இந்த கூட்டணி மாறும்.

வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம். தவெக தனித்து போட்டியிட்டு கடைசி நேரத்தில் கட்சியின் வேட்பாளர்கள் மாற்று கட்சியின் ஆசைவார்த்தைக்கு இணங்கி மனம் மாறிவிட்டால் எல்லாமே சொதப்பிவிடும். தேர்தல் முடிந்த பின்னர் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கூட விலைபோக வாய்ப்புண்டு.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் அரசியல் டிரெண்டில் மாற்றத்தை உருவாக்கலாம். விஜய்யின் அரசியல் எழுச்சி உற்சாகமானதாக இருந்தாலும், தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு அசைக்க முடியாத தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளை தோற்கடிப்பது என்பது மிக கடுமையான சவால்.

தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவினால், விஜய் எதற்காக அரசியலுக்கு வந்தாரோ, அது எதிர்மறையாகி, அவருக்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்கிவிட வாய்ப்புண்டு. எனவே அரசியலில் நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமானால், விஜய்க்கு அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைவது என்பதே தற்போதைக்கு மிகவும் உகந்த மற்றும் வெற்றிக்கான ஒரே வழியாக இருக்க முடியும் என்பதே பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.