தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆளுங்கட்சியின் ஊழல்கள், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஆகியவற்றை தைரியமாக எதிர்க்கட்சிகள் பேசுவதை மக்கள் வரவேற்பார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சி என்ற பலம் இருந்தாலும் இந்த தேர்தல் அக்கட்சிக்கு ஒரு முக்கியமான தேர்தல். 2019 (மக்களவை), 2021 (சட்டமன்றம்), 2024 (மக்களவை) ஆகிய மூன்று தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலிலும் தோல்வியடைந்தால், அதிமுகவின் சிதறுவதை தவிர்க்க முடியாது என்ற கருத்து நிலவுகிறது.
திமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை அதிமுக மட்டுமின்றி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டுமே பிரிக்கும் என்றாலும் மேலோட்டமாக பார்க்கும்போது இது திமுகவுக்கு சாதகமான சூழ்நிலையாக தெரிகிறது. ஆனால், மக்கள் எப்போதுமே ஒரு தெளிவான முடிவை எடுப்பார்கள்; திமுக வேண்டாம் என்றால், யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று ஒரு கட்சியை தான் தேர்ந்தெடுப்பார்களே தவிர தொங்கு சட்டசபைக்கு வழிவகுக்க மாட்டார்கள்.
காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திமுகவுக்கு மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சிக்கும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. “விமர்சனம் செய்த திமுகவை, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்ற விமர்சனம் வருவதால், தற்போது திமுகவை விமர்சனம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் விஷயத்தை காரணமாக வைத்து திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்து தவெக அல்லது பாஜக இல்லாத அதிமுகவுடன் கூட்டணி சேரலாம்.
பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், “ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் எடப்பாடி பழனிசாமியை மிரட்ட முடியும். அளவுக்கு மீறி மிரட்டினால், ‘நீங்கள் எங்களுக்கு தேவையில்லை; நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துக்கொள்கிறோம்’ என்று அதிமுக கூறிவிட்டால், வரும் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்” என்ற யதார்த்தமும் உள்ளது.
எனவே எந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டாலும் ஒரு மாற்றாக தவெக இருப்பதால் விஜய்க்கு தான் இந்த தேர்தல் ஜாக்பாட் என சொல்லலாம். நான் இறங்கிட்டா நான் தான் ஹீரோ என பஞ்ச வசனத்திற்கு ஏற்ப விஜய் தான் மற்ற கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
