அதிமுக, திமுக எடுத்த ரகசிய சர்வே.. சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?

  தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், அதிமுக, திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக மற்றும்…

admk dmk

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், அதிமுக, திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக ரகசியமாக சர்வே மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவை பொருத்தவரை, எடப்பாடி பழனிச்சாமியின் மகன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒரு சர்வே எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சர்வேயில், தற்போது உள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்றும், அதிமுக பலமாக இருக்கும் முக்கிய தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் குறைந்து காணப்படுவதாகவும், தற்போது உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அதேபோல், திமுக தரப்பில் மேற்கொண்ட சர்வேயில், தற்போதைய 45 சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்றும், 50 தொகுதிகளில் உட்கட்சி பஞ்சாயத்து இருப்பதால் அந்த பிரச்சனைகளை சரி செய்தால் வெற்றி உறுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இப்போதே தேர்தல் நடந்தாலும் 95 தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சர்வே முடிவுகள் கூறுகின்றன. மேலும், திமுக இந்த முறை 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகளுக்காக வெறும் 64 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.