தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ஒரு வலிமையான கூட்டணியை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெறும் அரசியல் திருப்புமுனைகள் அவருக்கு சாதகமாக இல்லை என்றும், அதனால் அவர் நட்டாற்றில் விடப்பட்டார் எனக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே இருப்பதால், அவை மீண்டும் இணைந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டும் அல்ல, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், மீதம் இருப்பது சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தான். ஆனால், அந்த கட்சியும் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, அதிமுக கூட்டணியில் இணைய நாம் தமிழர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த கூட்டணியும் இல்லாமல் நட்டாற்றில் விடப்பட்டது போலவே, தற்போது விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் கூட்டணி இல்லாமல் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாத்தியமில்லை.
மேலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று விஜய் எதிர்பார்த்த நிலையில் அதுவும் இனி நடைபெற வாய்ப்பே இல்லை என்பதால் விஜய்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
எனவே, விஜய் கட்சியின் தோல்வி உறுதி செய்யப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் சமாளித்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கி விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.